MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக அரசு முயற்சிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

திருநெல்வேலியில் நடந்த மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,
தேவாலயங்கள் புனரமைப்பு:
சிறுபான்மை கல்வி நிறுவன ஆசிரிய தேர்வுத்தகுதி கமிட்டியில் அந்தந்த நிறுவனங்களின் பிரதிநதிகள் மட்டுமே இருந்து தேர்வு செய்வதற்கான அரசாணையில் கையெழுத்து போட்டுவிட்டுதான் இங்கு வந்துள்ளேன். ராமநாதபுரம், கடலாடியில் உள்ள தொன்மை வாய்ந்த புனித யாக்கோப் தேவாலயம் ரூ.1.42 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும்.
ஆசிரியர் தகுதித்தேர்வு பிரச்சினையில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் நேரடியாக பேசினேன். அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை நீட்டிப்பதற்கு பதிலாக இந்த வழக்கில் மாநில அரசால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்றோம்.
ஆசிரியர்கள் நியமனம்:
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து டெட் தேர்வு தொடர்பான அரசியலமைப்பு தொடர்பான உச்சநீதிமன்றம் 7 பேர் கொண்ட குழுவை ஆராய உத்தரவிட்டுள்ளது. இதனால், சிறுபான்மையின கல்வி நிறுவனங்களில் 1439 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே நியமிக்கப்பட்ட 470 ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் விழாவிற்கு முன்பே ஆணைகள் வழங்கப்படும்.
அமைதியை சீர்குலைக்க முயற்சி:
இப்படி அனைத்து மதங்கள் சார்ந்தும் பாகுபாடின்றி கோரிக்கைகளையும், திருப்பணிகளையும் செய்கிறோம். இதுக்கு தமிழ்நாட்டு மக்கள் நீங்கள் பக்கபலமாக இருக்கிறீர்கள். இது சிலரின் கண்களை உறுத்துகிறது. எப்படி தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கலாம்? ஒன்றாக இருக்கும் மக்களை எப்படி எதிரிகளாக பிரித்து வைக்கலாம் என்று யோசிக்கிறார்கள்? ஆன்மீகத்தின் பெயரில் சில அமைப்புகள் அழைத்துச் செல்லும் வழி வன்முறைக்கான பாதை என்று தமிழ்நாடு உணர்ந்துள்ளது.
இங்கே ஒரு கோயிலில் திருவிழா நடந்தால் அங்கு வரும் மக்களுக்கு கிறிஸ்தவர்கள், முஸ்லீம் மக்கள் உணவு, மோர் கொடுப்பார்கள். வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடக்கும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்கு இந்துக்கள் செல்வார்கள். ரம்ஜான் காலத்தில் நோன்பு கஞ்சியும், பிரியாணியும் இந்துக்கள் வீட்டுக்கு தேடி வரும்.
சந்தேகப்படுங்கள்:
இந்த சகோதர உணர்வும், பகுத்தறிவுத் திறனும்தான் தமிழ்நாடு. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற இயேசுவின் எண்ணத்திற்கு இலக்கணமாக திராவிட மாடல் ஆட்சி நடத்துகிறோம். எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் உங்கள் மத உணர்வைத் தூண்டினால் சந்தேகப்படுங்கள். கவனமாக இருங்கள்.
ஒருவரை உங்களும் வஞ்சிக்காத படி எச்சரிக்கையாக இருங்கள். ஒன்றியத்தை ஆளும் அரசு சிறுபான்மையின மக்களுக்கு அச்சுறுத்தும் அரசாக உள்ளது. அதனால்தான் அவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்தாங்க. அதனால்தான் கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தினோம். துரோகம் செய்வதையும், மக்கள் நலனை அடகு வைப்பதையே லட்சியமாக செயல்படும் அதிமுக அந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்கு அளித்தது.
மதச்சார்பின்மையை நீக்க துடிக்கும் பாஜக:
ஒன்றிய பாஜகவைப் பொறுத்தவரை மதச்சார்பின்மை என்ற சொல் வேப்பங்காயாக கசக்கிறது. அதை அரசியலமைப்பில் இருந்து நீக்க துடிக்கிறார்கள். நாட்டோட பன்முகத்தன்மையை சிதைத்து ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற யதேச்சதிகாரத்தை செயல்படுத்த நினைக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் தங்கள் திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார்கள். எப்படிப்பட்ட பாஜகவின் நாசகர திட்டத்தை எதிர்த்து முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டிற்கும், திமுக-விற்கும் இருக்கிறது. இதுதான் நமது வரலாறு.
இவ்வாறு அவர் பேசினார்.





















