மேலும் அறிய
Advertisement
Pugar Petti: பதற்றம் நிறைந்த இடத்தில் புதிய டாஸ்மாக்: மதுரை கிராம மக்கள் அச்சம்!
”இப்பகுதியை மீண்டும் பின்னோக்கி செல்லவைக்கும் டாஸ்மாக் கடை வைக்க வேண்டாம். பாதிப்புகள் இல்லாத பகுதிக்கு டாஸ்மாக் கடையை மாற்றிக் கொள்ள வேண்டும்" என தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள எட்டிமங்கலம் பகுதியில் இருக்கு சுந்தர்ராஜபுரத்தில் புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமம மக்கள் கொந்தளித்துள்ளனர். டாஸ்மாக் கடை திறக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
இது குறித்து புகார் பெட்டிக்கு வந்த தகவலின்படி,"மேலூர் நகருக்குள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மேலூர் - மதுரை முதன்மைச் சாலை அருகே செயல்பட்டுக்கொண்டிருந்த டாஸ்மாக் கடைக்கு பொதுமக்களின் எதிர்ப்பால் மெல்ல இடம்பெயர்ந்து, அழகர் கோயில் முதன்மைச் சாலையில் அமையப் பெற்றுள்ள பழையசுக்காம்பட்டி என்ற கிராமத்திற்கு எப்படியாவது கொண்டுவர பல்வேறு வழிகளில் முயற்சித்தனர் அதிகாரிகள்.
இதை அறிந்த பழையசுக்காம்பட்டியை சார்ந்த பொதுமக்கள் மேலூர்- அழகர்கோயில் சாலையில் தீரத்துடன் அமர்ந்து அறவழி மறியல் போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவிக்கவே பழைய சுக்காம்பட்டியில் மதுபானக் கடை அமைக்கும் முயற்சியை கைவிட்டனர். அப்போராட்டத்தின்போது டாஸ்மாக் தரப்புக்கு தீவிரமாக வக்காலத்து வாங்கிய தி.மு.க., வார்டு கவுன்சிலர் அ.பாண்டி பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டார் என்பது வரலாறு.
பின்னர்தான் மேலூர்- நத்தம் முதன்மைச் சாலையில் அமையப்பெற்றுள்ள முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் அழகிய கிராமமாக விளங்கும் எட்டிமங்கலம் (சுந்தரராஜபுரம்) பகுதிக்கு, மதுபானக் கடையை கொண்டுவர தயாராகி வருகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக எட்டிமங்கலம் மண்ணில் விளையும் கரும்பும், வாழையும் தென்னிந்திய அளவில் பெயர் பெற்றவை ஆகும்..
மேற்படி சுந்தரராஜபுரம் (அக்ரஹாரம்) பகுதிவாழ் பட்டியலின மக்கள் தங்களுக்கான தனிச் சுடுகாட்டிற்கு பாதை கேட்டு பல ஆண்டுகளாக போராடிய போதும் அ.தி.மு.க., அரசு செவி சாய்க்கவே இல்லை. பின்னர் சுடுகாட்டிலேயே வெயிலென்றும், இரவென்றும், பனியென்றும் பாராமல் குடும்பத்துடன் குடியேறும் போராட்டம் நடத்தியும், மதுரை உயர் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தியும்தான் ஒருவழியாக சுமார் 5 வருடங்களுக்கு முன்பாகவே சுடுகாட்டுப் பாதையை பெற்றனர்.
பொதுமக்களின் சுடுகாடு உள்ளிட்ட அடிப்படை வசதியைக் கூட செய்து தராமல் இழுத்தடித்த அரசு டாஸ்மாக் அமைப்பதில் மட்டும் இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன்?
எட்டிமங்கலத்தில் ஒரே ஒரு அரசு நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. இதை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தவோ, விவசாயத்தை ஊக்குவிக்க நலத்திட்டப் பணிகளோ, தகுந்த பேருந்து வசதிகளை நீட்டிக்கவோ, சாலை வசதிகளை மேம்படுத்தவோ அரசு முனைப்பு காட்டாமல் டாஸ்மாக் கடையை நிறுவி இளைஞர்களையும், விவசாயிகளையும் சீரழிக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
அதே போல் சுந்தரராஜபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில்தான் எட்டிமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம், சமுதாயக்கூடம், செக்கடிக் கோவில், கிராம சேவைக் கட்டிடங்கள் அமையப் பெற்றுள்ளது. இங்குதான் பெரும்பாலான திருமணம், வழிபாடு உள்ளிட்ட விழாக்களும், அரசு சார்ந்த முக்கிய பணிகளும் நடைபெறும்.
சுந்தரராஜபுரம் பேருந்து நிறுத்தம் என்பது எட்டிமங்கலம், புலிப்பட்டி, கவட்டயம்பட்டி, முத்துவேல்பட்டி, காமாட்சிபட்டி, தேனிபட்டி, வினோபாகாலனி, செட்டியார்பட்டி, ஒத்தப்பட்டி உள்ளிட்ட கிராமத்தை சார்ந்த பள்ளி மாணவர்களும், பெண்களும், முதியோரும், விவசாயிகளும் பேருந்து வசதிக்காக கூடும் மையப்பகுதியாகும். குறிப்பாக முல்லைப்பெரியாறு ஒரு போக பாசன நேரத்தில் உழவுப் பணிக்காக விவசாயத் தொழிலாளர்கள் சங்கமிக்கும் புனிதமான இடமாகும்.
சாதிய ரீதியான சென்னகரம்பட்டி இரட்டைப் படுகொலையும், மேலவளவு எழுவர் படுகொலையும் நடைபெற்ற அதே சாலையில் மட்டுமல்ல, கொடூர சம்பவ இடங்களுக்கு மிக மிக அருகில் டாஸ்மாக்கையும் நிறுவ முயற்சிப்பது சாதீய விஷப்பாம்புகளுக்கு பால் வார்ப்பதை போன்றது, பட்டியலின மக்களின் பாதுகாப்பில் பதம் பார்ப்பதை போன்றது.
எனவே அரசும், மேலவளவு காவல்துறையும், மேலூர் வருவாய் துறையும் டாஸ்மாக் அமைக்கும் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு கைவிட வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வழக்கறிஞர்கள் பா.ஸ்டாலின் மற்றும் சேகுவாரா நம்மிடம் பேசுகையில்,"மேலூர் பகுதியில் மிகவும் பதற்றமான பகுதியாக மேலவளவு இருந்துவருகிறது. இதனால்தான் காவல்நிலையம் கூட இப்பகுதிக்கு வந்தது. தற்போது ஓரளவு சூழலில் மாறி இப்பகுதி மாணவர்கள் அதிகளவு படிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் இப்பகுதியை மீண்டும் பின்னோக்கி செல்லவைக்கும் டாஸ்மாக் கடை வைக்க வேண்டாம். பாதிப்புகள் இல்லாத பகுதிக்கு டாஸ்மாக் கடையை மாற்றிக்கொள்ள வேண்டும்" என தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion