மதுரையில் கழிவுநீர் தொட்டி சீரமைப்பின்போது 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு
மாநகராட்சி கழிவுநீர் தொட்டி சீரமைப்பு பணியின் போது விஷவாயு தாக்கி 3பணியாளர்கள பலியான சம்பவம் தொடர்பாக மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பழங்காநத்தம் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் உள்ள மோட்டார் பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கழிவு நீர் செல்வதில் அடைப்பு ஏற்பட்டதால் மோட்டார் பழுது நீக்குவதற்காக மதுரை மாடக்குளம் பகுதியை சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்த பணியாளர் சிவக்குமார் மற்றும் கோட்டைமேடு பகுதியை சார்ந்த லட்சுமணன், மாடக்குளத்தை சேர்ந்த சரவணன் ஆகிய மூன்று பேரும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கழிவுநீர் தொட்டியில் உள்ள விஷவாயு தாக்கியதில் அடுத்தடுத்து மூன்று பணியாளர்களும் தொட்டியில் தவறி விழுந்துள்ளனர். இதனை அடுத்து தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்த மூவரையும் சடலமாக மீட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கத்துரை ஆகியோர் நேரில் வந்து சம்பவம் குறித்து கேட்டறிந்து விசாரணை நடத்தினர். முன்னதாக சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் தொட்டியை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்ட இரு ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டு தொகை மற்றும் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாநகராட்சியில் கழிவு நீர் தொட்டி பழுதுநீக்கும் மற்றும் சீரமைக்கும் பணிகளின் போது பணியாளர்களுக்கு சுவாச கருவி போன்ற உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காத நிலையில் தான் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த வி.ஜி.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் விஜய் ஆனந்த் மற்றும் நிறுவனத்தின் பொறுப்பாளர் ரமேஷ் மற்றும் லோகநாதன் ஆகிய 3 பேர் மீது எஸ் எஸ் காலனி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து காளமேகம் என்பவர் கூறுகையில், சம்மந்தப்பட்ட கழிவுநீர் கால்வாயில் இறங்கும் போது உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். அதிகாரிகள் முன்னிலையில் பல்வேறு பாதிகாப்பு வசதிகளுடன் தான் உள்ளே இறங்கியிருக்க வேண்டும். இதனை வீடியோ பதிவும் செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்காமல் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் பணியாளர்கள் வேலை செய்துள்ளனர். அப்பகுதிக்கு உட்பட்ட பெண் கவுன்சிலரின் கணவர் கொடுத்த அழுத்தத்தால் தான் வேலை செய்துள்ளனர். இதனால் உயிரிழப்பு சம்பவம் நடந்துவிட்டது. எனவே உத்தரவுகளை பின்பற்றி தான் இது போன்ற பணிகளை செய்ய வேண்டும்” என்றார்