மேலும் அறிய
Advertisement
’பெரியார் பிறந்தநாள் சமூகநீதி தினமாக அறிவித்தது வரவேற்கத்தக்கது’- காந்தியின் பேத்தி பேட்டி
’’சமூகநீதி என்பது அரசால் மட்டுமே செய்துவிடக்கூடிய பணி அன்று. ஒவ்வொருவருக்குள்ளும் சமூகநீதி தத்துவம் பிறக்க வேண்டும்’’
விடுதலை போராட்டத்தின் போது நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காந்தியடிகள் மதுரைக்கு வந்தபோது வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளின் உடைகளால் ஈர்க்கப்பட்டார். கோட்டு சூட்டு ஆடையில் இருந்து எளிமையான வேட்டி உடைக்கு காந்தி மாறினார். அவரை அரை ஆடை ஏற்ற தினமாக செப்டம்பர் 22ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. காந்தியடிகள் அரை ஆடை ஏற்றதற்கான நூற்றாண்டு அனுசரிக்கப்பட உள்ள நிலையில் மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்திற்கு மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா வருகை தந்தார். அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், அருங்காட்சியத்தையும் சுற்றி பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உலகப் புகழ் வாய்ந்த மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பாக காந்தியடிகள் இந்திய நாட்டின் எளிய விவசாயியை போன்றே தனது தோற்றத்தையும் மதுரையில்தான் அடையாளமாக்கிக் கொண்டார். இந்திய நாடு கடந்த 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் விடுதலையடைந்தது. ஆனாலும் தான் மேற்கொண்ட அரையாடை விரதத்தை காந்தியடிகள் கடைசி வரை கைவிடவில்லை. விடுதலை பெற்ற இந்தியாவில் இன்றைக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. அச்சமின்றி வெளியில் சென்று வருவது இயலாத காரியமாகத்தான் உள்ளது. இன்றைய இளைஞர்கள் பெண்களைப் போற்றும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இழிவான செயல்களில் ஒருபோதும் இறங்கக்கூடாது. பெண்மை என்பதே தாய்மைதான். அந்த எண்ணம் எல்லோருக்குள்ளும் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு காந்திய சிந்தனைகளைக் கொண்டு செல்வதற்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. குறிப்பாக மதுரையிலுள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் புனரமைப்பிற்கு நிதியுதவி செய்துள்ளது. மேலும் பல்வேறு உதவிகளை செய்ய வேண்டும் என இந்த நேரத்தில் நான் கோரிக்கை விடுக்கிறேன். தமிழ்நாடு அரசு பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். சமூகநீதி என்பது அரசால் மட்டுமே செய்துவிடக்கூடிய பணி அன்று. ஒவ்வொருவருக்குள்ளும் சமூகநீதி தத்துவம் பிறக்க வேண்டும். அப்போதுதான் அரசின் எண்ணம் நிறைவேறும். காந்தியடிகளை நாம் தேசப்பிதா என்றழைத்தாலும், மறைமுகமாக அவரது மனைவி கஸ்தூரிபா தேசத்தின் தாயாகிறார் என்பதுதான் உண்மை. தாய்மைதான் இந்த உலகத்தை ஆள முடியும் என்பதைச் சொல்வதற்கே இதனைக் கூறுகிறேன். நமது நாட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது அரசாங்கத்தின் கடமையாகப் பார்க்கக்கூடாது. நம் ஒவ்வொருவரின் கடமையாகப் பார்க்க வேண்டும். நமது எண்ணத்தையும் மனதையும் தூய்மையாக வைத்துக் கொண்டால் நல்லதொரு வாழ்க்கையை நாம் வாழ முடியும். கரோனா பெருந்தொற்று காலத்தில் இன்றைக்கு காந்தியடிகளின் தத்துவமே மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது. எளிமையான, அன்பான வாழ்க்கை முறையின் மூலம் இதுபோன்ற பெருந்தொற்றுகளை நாம் வென்றுவிட முடியும். இந்திய நாட்டிற்காக எவ்வளவோ கொடுத்த மகாத்மா காந்தியடிகளின் நினைவையும், மீனாட்சியின் அருளாசியையும் நான் மதுரையிலிருந்து எடுத்துச் செல்கிறேன் என்பதில் எனக்கு அளவில்லாத பெருமை உண்டு' என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது காந்தியின் கொள்ளு பேரனான வித்தூர் பரதன் உடனிருந்தார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion