EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற அதிமுக - பாஜக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைக்க காய் நகர்த்தப்பட்டு வருகிறது. அதே நேரம் ஓபிஎஸ் மற்றும் டிடிவியை கூட்டணியில இணைக்க இபிஎஸ் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெருங்கும் தேர்தல்- கூட்டணியை பலப்படுத்தும் கட்சிகள்
தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் களம் இறங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்க கூட்டணியையும், கட்சியையும் பலப்படுத்தி வருகிறது. ஏற்கனவே கடந்த 8 ஆண்டுகளாக தொடரும் கூட்டணியான காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக, மநீம உள்ளிட்ட கட்சிகளை அரவனைத்து செல்கிறது. மேலும் தேமுதிகவிற்கும் ஒரு பக்கம் வலை வீசி வருகிறது. எதிர்கட்சியான அதிமுகவில் இன்னும் பலமான கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. தற்போது வரை பாஜகவை மட்டும் கூட்டணியில் இணைந்துள்ளது. ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி கூட்டணியில் இருந்து விலகிவிட்டனர்.
அதிமுகவின் கூட்டணி திட்டம்
பாமகவும் இரண்டு பிளவாக பிரிந்து கிடக்கிறது. தனி தனி அணியாக நேர் எதிரில் பாமக போட்டியிட்டால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் வாக்குகள் சிதறி தோல்வி கிடைக்கும் நிலை தான் உள்ளது. எனவே தற்போது வரை அதிமுக கூட்டணி என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு தமிழகத்திலும் ஆட்சியை பிடிக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்காக அதிமுக- பாஜக கூட்டணியில் விஜய்யை இணைக்க தூது விடப்பட்டது. ஆனால் தனது கொள்கை எதிரி பாஜக என தவெக தலைவர் விஐய் தெரிவித்துள்ளார்.
எனவே ஒருங்கிணைந்த அதிமுகவையாவது உருவாக்க வேண்டும் என பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரிந்து சென்ற தலைவர்களான ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் இணைக்க பாஜக முயற்சி செய்தது. ஆனால் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லையென பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் தமிழகத்தில் வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும் திட்டமிட்ட அமித்ஷா, மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடம் பேச பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை அனுப்பிவைத்தார்.
இபிஎஸ்- நயினார் பேச்சுவார்த்தை
அப்போது அதிமுக- பாஜக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைப்பு,தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது கூட்டணியில் எந்த கட்சியை இணைக்க வேண்டும், எத்தனை தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அதிமுக தான் முடிவு செய்யும் என உறுதியாக தெரிவித்துள்ளார். அடுத்ததாக கட்சியில் தான் ஓபிஎஸ் மற்றும் டிடிவியை இணைக்க முடியாது என தெரிவித்துள்ளீர்கள் கூட்டணியில் இணைத்துகொள்ளாலாமே என்ற கேள்விக்கு, அதற்கு வாய்ப்பே இல்லையென இபிஎஸ் மறுத்துள்ளார். இதனால் பாஜக மாநில தலைவர் மட்டுமில்ல கூட வந்த நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஓபிஎஸ்- டிடிவியை இணைக்க மறுப்பு
இதனிடையே டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவிடம் இபிஎஸ் கூறிய தகவல்களை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளை மறுதினம் அமித்ஷா தமிழகம் வரும் போது புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்க பாஜக போட்ட திட்டம் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இருந்த போதும் அரசியலில் என்ன மாற்றம் எப்போது வேண்டும் என்றாலும் நடக்கலாம் எனவே பொறுதிருந்து தான் பார்க்க வேண்டும்.





















