மேலும் அறிய
”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
திருமண மாலை ஆர்டர் செய்தவர்களுக்கு இலவசமாக கொடுக்க திட்டமிட்டு கொடுத்து வருகிறார். மதுரையில் மல்லிகை பூ மாஸ்க் மணக்கிறது.

மல்லிகை பூ மாஸ்க்
'கொரோனாவை மக்கள் மறக்க முடியாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. நோய் தொற்று தாக்கத்தை விட பொருளாதார தாக்கத்தை அதிகளவு ஏற்படுத்தியுள்ளது. முதல் கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் என கட்டம் கட்டி தாக்கிவருகிறது. தமிழ்நாடு அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில் மூன்றாம் கட்ட அலை எப்படி இருக்கப் போகிறதோ என்று யூகிக்க முடியாத அளவு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்கள் அச்சம் வேண்டியதில்லை, பாதுகாப்பாக இருந்தால் போதும் என அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை வந்தால் தயாராக இருக்க வேண்டும் என மதுரையில் மணமக்களுக்கு மணக்கும் மலர் மாஸ்க் தயாரித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார் பூக்கட்டும் கலைஞர் ஒருவர். ஆக்ஜிஜன் மாஸ்க், என்-90 மாஸ்க், பட்டுத்துணி மாஸ்க், டிஜிட்டல் மாஸ்க், தங்க மாஸ்க் என பல வெரைட்டியில் பார்த்த நமக்கு மந்தாரை இலையில் மலர்கள் பயன்படுத்தி மணக்கும் மாஸ்க் தயாரித்துள்ளார் பூக்கடைக்காரர் மோகன்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே சுவாமி சன்னதியில் பூக்கடை நடத்திவரும் மோகனை சந்தித்தோம். "மோகன் பூக்கடை, சுவாமி சன்னதி, மதுரை நம்பர் ஒன்று” - இதுதான் என் கடை அட்ரஸ். இது தான் எனக்கு அடையாளம். என் வாழ்வாதரம், இந்த தெருவில்தான் துவங்கி தொடர்ந்து பயணிக்கிறது. சாமி மாலை, நிச்சயதார்த்த மாலை, கல்யாண மாலை, காதுகுத்து மாலை, வீட்டு நிலை மாலை, வளைகாப்பு மாலை, முதல் இரவு அலங்காரம், ஸ்டேஜ் அலங்காரம் இப்படி எல்லாமே எனக்கு அத்துப்படி. பூக்கடை எனக்கு பரம்பர தொழில் கிடையாது. நானே இன்ரெஸ்ட்ல கத்துக்கிட்டு தொழில் செய்றேன்.

பூக்கடையில கிரியேட்டிவிட்டி ரெம்ப முக்கியம் அப்பதான் ஓரளவாச்சும் சம்பாரிக்க முடியும். இயற்கை பொருள் வேகமாக கெட்டுப்போயிரும். அதுக்கு டைம் முக்கியம். அதனால் நேரங்காலம் பார்க்காமல் மாலை கட்டுவேன். கஸ்டமர் எப்ப கேட்டாலும் மாலை கொடுக்க தயாரா இருக்கணும். விடிய,விடிய வேலை செஞ்ச காலமெல்லாம் இருக்கு. அழகரு ஆத்துல இறங்குற அண்ணைக்கு மட்டும் 200 பேருக்கு மாலை கொடுப்பேன். வேலை கடுசா இருக்கும். திருக்கல்யாணம் நடக்கும்போது ஸ்பான்சர் வரும். யானைக் கண்மாலை, மல்லிகை முப்பட்டம் இப்புடி ஏகப்பட்ட ஐட்டம் போகும். சாமி ஊர்வலத்துல மனோரஞ்சிதம் பூ கொடுப்பேன். ஒவ்வொரு பூவும் 15 ரூவா 20 ரூபா ரேட்டு. அவ்வளவு விலைகொடுத்து நெருக்க நெருக்க கட்டி சாமிக்கு கொடுப்போம். வாசம் தூக்கி அடிக்கும் சாமி கும்புடாதவங்களுக்கு கூட லேசா அசத்தும்.

இப்படி என் பூ தொழில ரசிச்சுதான் செய்றேன். இந்த கொரோனா காலகட்டத்தில் நாம என்ன விழிப்புணர்வு செய்யலாம்னு யோசிச்சேன். அதனால நார்மல் மாஸ்க்குமேல மந்தார இலைவச்சு அதுல மல்லிகை, சம்மங்கி, ஜரூரா உள்ளிட்ட பூவ கலந்து மாஸ்க் செஞ்சேன். இதை திருமணத்தன்று மணமக்கள் போடும் போது எல்லாருடைய கவனமும் அவங்க பக்கம் திசை திரும்பும். அதனால் மாஸ்க் போட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படும். மாஸ்க், மந்தார, இலை, பூக்கள் இப்படி மூணு அடுக்கு மாஸ்க்கா மலர் மாஸ்க்க ரெடி பண்றேன். அதனால தொந்தரவு எதுவும் இருக்காது. மணக்குற மாஸ்க் நம்ம மாஸ்க்தான் என்றார்" என்றார் சிரித்துக்கொண்டே.

திருமணத்தன்று மணமக்கள் மணமாலையுடன் மலர் முகக்கவசம் அணிந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என ஒரு ஐடியாவை உருவாக்கியுள்ளார் மோகன். மணமக்களே முகக்கவசம் அணிந்திருக்கும் போது நாமும் அவசியம் அணிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். திருமண மாலை ஆர்டர் செய்தவர்களுக்கு இலவசமாக கொடுக்க திட்டமிட்டு கொடுத்து வருகிறார். மதுரையில் மல்லிகை பூ மாஸ்க் மணக்கிறது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
திருவண்ணாமலை
Advertisement
Advertisement






















