Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
Savukku Shankar: அவதூறு புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பல காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று காலை சவுக்கு சங்கர் வீட்டிற்கு போலீசார் வந்துள்ளனர். இதனையடுத்து எங்களது மொத்த டீமையும் போலீசார் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக சவுக்கு சங்கர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

யூடியூப்பர் சவுக்கு சங்கர் சர்ச்சை பேச்சு
பிரபல யூடியூப்பரான சவுக்கு சங்கர் சமூகவலைதளங்களில் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும், போலீஸ் அதிகாரிகளை குற்றம்சாட்டியும் வீடியோ பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் போலீஸ் ஐபிஎஸ் அதிகாரியை விமர்சித்தும், பெண் காவலர்களை தவறாக பேசியும் வீடியோ வெளியிட்டார். இதன் காரணமாக கடந்த ஆண்டு யூடியூபர் சவுக்கு சங்கரை தேனியில் போலீசார் கைது செய்தனர். அப்போது சவுக்கு சங்கரின் அறையில் கஞ்சா வைத்திருந்ததாக போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
சிறையில் சவுக்கு சங்கர்
இதுமட்டுமில்லாமல் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டதால் பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத நிலை நீடித்தது. இதனையடுத்து நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்ததையடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறையில் வெளியே வந்த சவுக்கு சங்கர் மீண்டும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகளை ஒருமையில் விமர்சித்தும், குற்றம்சாட்டியும் வீடியோ வெளியிட்டார். இதில் பல வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சவுக்கு சங்கர்
இந்த நிலையில் இன்று காலை சவுக்கு சங்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான், மாலதி உள்ளிட்ட மொத்த டீமையும் போலீசார் கைது செய்ய போகிறார்கள் என அலறி அடித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் காலையில் தனது வீட்டிற்கு ஆதம்பாக்கம் போலீஸ் வந்து காத்துள்ளனர். ஆனால் நான் வழக்கறிஞர்கள் வந்தால் தான் வீட்டின் கதவை திறப்பேன் என தெரிவித்துவிட்டேன். இதனால் போலீசார் வாசலில் காத்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இதே போல சவுக்கு சங்கரோடு வசிக்கும் மாலதியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் போலீசார் வீட்டிற்கு வெளியே நிற்கிறார்கள். எந்த நேரமும் கைது செய்யப்படலாம். இந்த வழக்கில் எப்ஐஆரில் சவுக்கு சங்கர், தனது பெயர் மற்றும் மேலும் 4 பேர் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வழக்கின் பின்னனி என்ன.?
ரெட் அண்ட் ஃபாலோ என்ற திரைப்படம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக கூறி, அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக், கடந்த ஜூன் மாதம் சவுக்கு சங்கர் அலுவலகத்திற்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது அந்த வீடியோவை நீக்க 10 லட்சம் பணம் கேட்டதாகவும், இதனால் அப்போது ஏற்பட்ட மோதலில் தயாரிப்பாளர்ஆயிஷா சாதிக்கை அடித்து அவர் கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை பறித்து விட்டதாகவும் எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.





















