பழனி: நவபாஷாண சிலையை ஆய்வு செய்த குழுவினர் - இந்து அமைப்பினர் அதிர்ச்சி
பழனி முருகன் மலைக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கருவறைக்குள் சென்று நவபாஷாண சிலையை ஆய்வு செய்த குழுவினர். பாலாலயம் பூஜை செய்யாமல் கருவறைக்குள் சென்றதாக இந்து அமைப்பினர் அதிர்ச்சி.
பழனி மலைக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கருவறைக்குள் சென்று நவபாஷாண சிலையை ஆய்வு செய்த குழுவினர், முன்னறிவிப்பின்றியும், முறையான பாலாலயம் பூஜை செய்யாமலும் கருவறைக்குள் சென்றதால் இந்து அமைப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
PM Modi Speech: கிராமத்தின் ஆன்மா..நகரத்தின் வசதி...தமிழில் பேசி அசத்திய பிரதமர் மோடி..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவுசெய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுடுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பழனி கோயில் மூலவர் சிலையான நவபாஷாண சிலையை ஆய்வு செய்ய இந்து சமய அறிநிலையத்துறை சார்பில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பொங்கிலியப்பன் தலைமையாலான சிலை பாதுகாப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்தக்குழுவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கோவை சிரவை ஆதினம், பேருர் மருதாச்சல அடிகளார், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், கோயில் இணைஆணையர் நடராஜன், பழனி நகர்மன்றத்தலைவர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்நிலையில் நேற்று பழனி கோயில் கருவறைக்குள் சென்று நவபாஷாண மூலவர் சிலையை ஸ்தபதி தட்சிணாமூர்த்தி தலைமையில் கருவறை சிலையை ஆய்வு செய்தனர்.
முன்னதாக, பிம்பசுத்தி பூஜை செய்து கருவறைக்குள் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் முன்கூட்டியே எவ்வித தகவலும் சொல்லாமல் கருவறைக்குள் சென்றது இந்து அமைப்புகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கருவறைக்குள் செல்வதற்கு முன்பாக கருவறைக்கு என தனியாக பாலாலயம் செய்தபின்னரே கருவறைக்குள் செல்லவேண்டும். ஆனால் பாலாலயம் எதுவும் செய்யாமல் குழுவினர் கருவறைக்குள் செல்வது தவறு என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பழனி கோவில் இணைஆணையரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, கருவறைக்குள் ஆய்விற்காக மட்டுமே சென்றதாக கூறினார். 18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புராதனம் வாய்ந்த, பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பழனி நவபாஷாண முருகன் சிலையை ஆய்வு செய்ய முன்கூட்டியே எவ்வித தகவலும் சொல்லாமல் கருவறைக்குள் சென்றுவந்த பிறகும் அதை வெளியே சொல்லாமல் இருந்த சிலை பாதுகாப்பு குழு, அறங்காவலர் குழு மற்றும் கோவில் அதிகாரிகளின் செயல் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்