TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
தமிழ்நாட்டில் முக்கிய பொறுப்பில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இந்த மாத இறுதியில் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. சென்னை மாநகர காவல் ஆணையராக இருக்கும் அருண் பணியிடமாற்றம் செய்யபடவுள்ளதாகவும், புதிய ஆணையர் வாய்ப்பு யாருக்கு கிடைக்கப் போகிறது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிகாரிகளின் பணியிட மாறுதல் லிஸ்ட் தயாராகியுள்ளதாக சொல்கின்றனர். ஏடிஜிபிக்களாக உள்ள சிலருக்கும் 2012 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரிகளாக உள்ள எஸ்.பிக்களுக்கும் பதவி உயர்வு கிடைக்கவுள்ளது. சென்னை காவல்துறையின் 110வது ஆணையராக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் கடந்த ஆண்டு, ஜூலை 8ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் சென்னை போலீஸ் கமிஷனராக பதவியேற்ற பின்னர், ரவுடிகளின் ஆட்டத்தை அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்தார். அதேபோல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்களும் காவல்துறையின் கடும் சோதனை மற்றும் ரோந்துகளால் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டன. இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையராக இருக்கும் அருண் பணியிடமாற்றம் செய்யபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஏடிஜிபி அந்தஸ்தில் இருக்கும் அருண், ஒருவேளை சென்னை மாநகர காவல் ஆணையர் பதவியில் இருந்து மாற்றப்பட்டால், அவரை சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அருண் மாற்றப்பட்ட பின்னர் சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக தற்போதைய சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும் டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில், இந்த பதவிக்கு தற்போதைய Enforcement Bureau ADGP அமல்ராஜ் ஐபிஎஸ், ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் ஆகியோரின் பெயரும் பரிசீலனையில் உள்ளது. ஒருவேளை, டேவிட்சன் தேவாசிர்வாதம் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்படாவிட்டால், அவர் உளவுத்துறையின் டிஜிபியாக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், தற்போதைய தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மாற்றப்பட்டு, எடிஜிபியாக பதவி உயர்வு பெறப்போகும் தற்போதைய சிபிசிஐடி ஐ.ஜி., அன்பு, தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஆவடி மாநகர புதிய காவல் ஆணையராக தற்போதைய தென்மண்டல ஐ.ஜி பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. மேலும், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனும் பணியிடமாற்றம் செய்யப்படவிருக்கிறார்.
மேலும், மத்திய மண்டலம், தென் மண்டலம், வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம் ஆகிய மண்டல அதிகாரிகளாக உள்ள ஐ.ஜிக்களும் மாற்றப்படவிருக்கின்றனர். குறிப்பாக, திருச்சி மாநகர காவல் ஆணையராக உள்ள காமினி ஐ.பி.எஸ், மத்திய மண்டல ஐ.ஜியாக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. வடக்கு மண்டல ஐ.ஜியாக உள்ள அஸ்ரா கார்க், மீண்டும் சென்னை மாநகர கூடுதல் ஆணையராக நியமிக்கப்படவிருப்பதாக தெரிகிறது. தென் மண்டல புதிய ஐ.ஜியாக சென்னை மாநகர காவல் ஆணையரக தலைமையத்தின் ஏடிஜிபி விஜயேந்திர பிதாரி நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏடிஜிபி, ஐ.ஜி, டி.ஐ.ஜிக்கள் தவிர்த்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள பல எஸ்.பிக்கள் மாற்றப்படவுள்ளனர். குறிப்பாக, செங்கல்பட்டு எஸ்.பியாக உள்ள சாய்பிரினீத் விழுப்புரம் எஸ்.பியாகவும், சென்னை மாநகர காவல் துறையில் டெபுடி கமிஷனராக உள்ள சிலர் மாவட்ட எஸ்.பிக்களாகவும் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான பட்டியல் உள்துறையில் தயாராகி வருவதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வரவிருக்கிறது.





















