Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
How to Identify Country Chicken : 'இனி நாட்டுக்கோழி போடுறேன்னு சொல்லிட்டு, போண்டா கோழி போட்டுட்டான் மாப்ள’ என ஏமாற வேண்டாம். உங்களுக்கான ஒரிஜினல் நாட்டுக்கோழியை கண்டுபிடிக்கும் அருமையான வழி இதோ..!

ஞாயிற்றுக்கிழமை என்றாலே, சென்னை கறிக்கடைகளில் காலை முதலே நீண்ட வரிசையில் கறி வாங்க காத்திருப்பார்கள் அசைவ பிரியர்கள். கோழிக்கறி வாங்குபவர்கள் பெரும்பாலும் பிராய்லர் வகை கோழியை வாங்கினாலும் நாட்டுக்கோழியை வாங்குவதற்கென ஒரு தனிக் கூட்டமே உண்டு. அதன் சுவை அப்படி.
பிராய்லர் கறி பிடிக்காத நகரத்து கிராமத்தான்கள்
குறிப்பாக, கிராமங்களில் இருந்து சென்னை போன்ற நகரங்களில் வந்து தங்கி வேலை பார்ப்பவர்களுக்கு, பிராய்லர் கோழிகள் பெரிதாக பிடிப்பதில்லை. அதற்காக அவர்கள் நாட்டுக்கோழியை வாங்க நினைக்கின்றனர். ஆனால், நாட்டுக்கோழி என்று அவர்கள் வாங்கி சமைத்தால், அது ஊரில் சாப்பிட்ட நாட்டுக்கோழி மாதிரி இல்லையே? அந்த ருசியும் வரவில்லையே? என்று ஏங்கிக் கிடப்பவர்கள் இங்கு ஏராளம்.
பண்ணைக்கோழி Vs நாட்டுக்கோழி
‘நாட்டுக்கோழி போடுறேன்னு சொல்லிட்டு போண்டா கோழி போட்டுட்டான் மாப்ள’ என சொல்வதுபோல், நாட்டுக்கோழி என்று சென்னையில் விற்கப்படும் கோழிகள் உண்மையிலேயே நாட்டுக்கோழி வகையை சேர்ந்தது அல்ல. அவை பண்ணைக் கோழிகள். பிராய்லர் கோழிகளே போலவே அடைத்து வைத்து, தீனிப் போட்டு வளர்க்கப்படும் ஒரு வகை. தோற்றத்தில் பிராய்லர் கோழி போல வெள்ளையாக இல்லாமல் இருந்தாலும், அவை ஒரிஜினல் நாட்டுக் கோழிகள் அல்ல. ஆனாலும், பண்ணைக் கோழிககளையே பல கடைக்காரர்களும் நாட்டுக் கோழி என்று சொல்லி கறிப்பிரியர்களிடம் விற்பனை செய்துவிடுகின்றனர். அவர்களும் பிராய்லருக்கு இது பரவாயில்லை என்று வாங்கி சாப்பிடுகிறார்கள்.
சென்னையில் ஒரிஜினல் நாட்டுக்கோழி கிடைக்குமா?
ஆனாலும், சென்னையில் பல்வேறு பகுதிகளில் உண்மையான ஒரிஜினல் நாட்டுக் கோழிகள் கிடைக்கின்றன. குறிப்பாக, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, போரூர் பகுதிகளில் ஒரிஜினல் நாட்டுக் கோழிகளுக்கு என்றே தனிக் கறிக்கடைகள் உண்டு. அதே மாதிரி நார்மலான கறிக்கடைகளிலும் பண்ணைக் கோழி, ஒரிஜினல் நாட்டுக்கோழி என்று சிலர் வகைப்படுத்தியும் விற்பனை செய்கிறனர்.
நாட்டுக் கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி ?
பிராய்லர் கோழி கறியை விட, பண்ணைக் கோழி விலையின் விலை சற்று அதிகம். பண்ணைக் கோழியை விட ஒரிஜினல் நாட்டுக் கோழியின் விலை இன்னும் அதிகம். குறிப்பாக, நாட்டுக் கோழியை கண்டுபிடித்து வாங்குவதற்கு எளிதான ஒரு வழி உண்டு.
பண்ணைக் கோழிகள் கறிக் கடை கூண்டுகளில் பெரிதாக வலம் வராமல், ஒரு மந்த நிலையிலேயே இருக்கும், பார்க்கும்போது நாட்டுக்கோழி மாதிரி இருந்தாலும் அவற்றின் நடவடிக்கைகளில் ஒரு தொய்வு இருக்கும். பெரிதாக ஆக்டிவாக இருக்காது. ஆனால், உண்மையான ஒரிஜினல் நாட்டுக்கோழிகள் கூண்டில் அடைத்தாலும் சற்று நேரம் கூட ஒரிடத்தில் உட்காராது. அங்கேயும் இங்கேயும் அலைந்துக்கொண்டும், பறக்க முயற்சித்துக்கொண்டும் இருக்கும். கூண்டை திறந்து பிடிக்கும்போது கூட கையில் சிக்காமல் ஓட முற்படும். இந்த வகையில் ஓரளவு நாட்டுக்கோழியை அடையாளம் கண்டு வாங்கலாம்.
மூக்கை வைத்து மூக்குப்பிடிக்க சாப்பிடலாம்
அதைவிட எளிதாக கண்டுபிடிக்க வேண்டுமானால், கோழியின் மூக்கை வைத்து நாட்டுக்கோழியை கண்டுபிடித்துவிடலாம். நாட்டுக்கோழியை கையில் பிடித்து, அதன் மூக்கை கவனியுங்கள். அது சற்று வளைந்து, அதே நேரத்தில் அந்த மூக்கு கூராக இருந்தால். அதுதான் உங்களுக்கான நாட்டுக்கோழி, முனை முழுங்கியது மாதிரி, கூர் இன்றி, அதன் மூக்கு இருந்தால் அது பண்ணைக் கோழி. அதே மாதிரி நாட்டுக்கோழியின் கண்கள் பிரகாசமாகவும், பரபரவென சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
இனி, இந்த வகையில் சென்னை மக்களும், சென்னையில் வாழும் வெளியூர் மக்களும் நாட்டுக்கோழியை எளிமையாக அடையாளம் கண்டு. அதனை வாங்கிச் சுவைக்கலாம்.






















