(Source: ECI/ABP News/ABP Majha)
தேனியில் புதிய ரயில்வே சரக்கு போக்குவரத்து தொடக்கம் - என்னென்ன வசதிகள் உள்ளன..?
மதுரை - போடிநாயக்கனூர் மின்மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சரக்குகளை ரயில் பாதையும் விரைவில் மின்மயமாக்கப்படும்.
தேனி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில், கடந்த 13 ஆம் தேதி முதல் தேனி ரயில் நிலையத்தில் பெரிய அளவில் சரக்குகள் கையாள புதிய ரயில்வே சரக்கு போக்குவரத்து வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சரக்கு அலுவலகம் காலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை வாரம் முழுவதும் செயல்படும். இங்கு பெட்ரோலிய பொருட்கள் , நிலக்கரி மற்றும் கோக் கரி தவிர மற்ற பொருட்களை கையாள அனுமதிக்கப்படும்.
இது மதுரை கோட்டத்தின் 19வது சரக்கு முனையமாகும். இந்த சரக்கு போக்குவரத்து அலுவலகம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய ரயில்வே சரக்கு இயக்க தகவல் அமைப்பு (Freight Operations Information System - FOIS) என்ற மென்பொருள் வாயிலாக சரக்கு பெட்டிகளை பதிவு செய்வது, வாடிக்கையாளருக்கு சரக்கு பெட்டிகளை பதிவு மூப்பு அடிப்படையில் வழங்குவது, சரக்குகளை ஏற்றுவது இறக்குவது போன்ற தகவல்களை பதிவது, வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக ரயில்வே ரசீதுகளை வழங்குவது, சரக்கு ரயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது போன்ற தகவல்களை அறிவது போன்ற பணிகளை கணிப்பொறி வாயிலாக செயல்படுத்த முடியும்.
சரக்கு அலுவலக ரயில் பாதை அருகே சரக்குகளை கையாள 650 மீட்டர் நீளமும், 16.20 மீட்டர் அகலமும் கொண்ட கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மழைக் காலங்களிலும் தங்கு தடை இன்றி சரக்குகளை கையாள முடியும். இங்கு ஒரே நேரத்தில் 42 சரக்கு பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலை கையாள முடியும். சரக்கு போக்குவரத்திற்காக தனி ரயில் பாதை அமைப்பு உள்ளதால் பயணிகள் ரயில் போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெற வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு , வர்த்தகர்கள் அறை மற்றும் கழிப்பறை குளியல் அறை வசதியுடன் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு தனித்தனி ஓய்வு அறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது .
சரக்குகளை லாரிகளில் விரைவாக ஏற்றிச்செல்ல தரமான தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. போதுமான விளக்கு வசதிகளுடன் இரவு நேரத்திலும் சரக்குகளை தடையில்லாமல் கையாள போதுமான மின்விளக்குகள்மற்றும் உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சரக்கு நிலைய நடைமேடை உட்பட பல்வேறு நவீன வசதிகள் ரூபாய் 5 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மதுரை போடிநாயக்கனூர் மின்மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சரக்குகளை ரயில் பாதையும் விரைவில் மின்மயமாக்கப்படும்.