தென் மேற்கு பருவ மழை எதிரொலி, 7 நாட்களில் 14 அடி நீர்மட்டம் உயர்ந்த முல்லை பெரியாறு அணை
கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப் ரோடு வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால், கேரளாவின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் கனமழையில் வெள்ளத்தில் மூழ்கின. அதே நேரத்தில், பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்து, வீடுகள் சேதமடைந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு - போடிமெட்டு இடையே ரோடு அகலப்படுத்தும் பணி நடந்தது. அப்போது, மூணாறில் இருந்து 13 கி.மீ., தொலைவில் உள்ள கேப் ரோட்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மலையை குடைந்து பாறைகள் உடைக்கப்பட்டன. அதனால் மழைக்காலங்களில் கேப் ரோட்டில் நிலச்சரிவு வழக்கமாகி விட்டது. கடந்த மே 12ல், பெய்த மழையில் பாறைகள் ரோட்டில் உருண்டு விழுந்து, போக்குவரத்து தடைபட்டது. இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தில் ஒரு வாரமாக கனமழை பெய்ததால், கேப் ரோடு வழியாக இரவில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
அங்கு மண் மற்றும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதால், பாதுகாப்பு கருதி கேப் ரோடு வழியாக அடுத்த உத்தரவு வரும் வரை போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதித்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். அதனால் மூணாறில் இருந்து பள்ளிவாசல், குஞ்சுதண்ணி, ராஜாக்காடு, ராஜகுமாரி வழியாக மாற்று வழியில் பூப்பாறை சென்று தேனி உட்பட பிற பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் என, அவசர தேவைக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் கேப் ரோடு வழியாக அனுமதிக்கப்படுகிறது.
மேலும், இடுக்கி மாவட்டத்தில், தடை விதிக்கப்பட்ட சுற்றுலா தொடர்பான செயல்பாடுகளை மீறுவோருக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் விக்னேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். கனமழையால் வால்பாறை அருகே, வேவர்லி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால், வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு, 200 மீட்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டுள்ள , சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் குறிப்பாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள கேரளாவில் 10 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 23ந் தேதி 114 கன அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 127.85 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 7 நாட்களில் மட்டும் 14 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 7741 கன அடி நீர் வருகிறது. இதனால் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 100 கன அடியாக இருந்த நீர்திறப்பு 467 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 4234 மி.கன அடியாக உள்ளது. இடுக்கி மாவட்டத்தில் 'ரெட் அலர்ட்' தொடர்வதால் தோட்டப் பணிகள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணிகள் ஆகியவற்றுக்கு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்தது. அதனால் தேயிலை, ஏலம் தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாததால் தோட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.





















