அரிதான அட்ரீனல் சுரப்பி கட்டிகளை அகற்றிய தனித்துவமான லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை - மதுரையில் மருத்துவர்கள் சாதனை
அரிதான, அட்ரீனல் சுரப்பி கட்டிகளை அகற்றிய தனித்துவமான லேப்ராஸ்கோப்பிக் அறுவைசிகிச்சை ; எதிர்காலத்தில் மருந்துகளை பயன்படுத்தும் அவசியத்தை நீக்கி சாதனை
தமிழ்நாட்டில் முதன்முறையாக “cortical-sparing adrenalectomy” என அழைக்கப்படும் ஒரு தனித்துவமான லேப்ராஸ்கோப்பிக் மருத்துவ செயல்முறையை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சமீபத்தில் மேற்கொண்டிருக்கிறது. சிவகங்கையைச் சேர்ந்த 33 வயதான ஒரு பெண்மணியின் இரு அட்ரீனல் சுரப்பிகளிலும் கட்டிகள் ஏற்படும் ஒரு அரிதான நேர்வான இப்பாதிப்பிற்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்திருக்கிறது. காட்ரிசால் என அழைக்கப்படும் ஒரு அத்தியாவசிய ஹார்மோனை தயாரிப்பதற்கு பொறுப்பான சுரப்பியின் ஒரு பகுதியான கார்டெக்ஸ் – ஐ இந்த அறுவைசிகிச்சை அகற்றாமல் அப்படியே தக்கவைத்துக் கொண்டிருப்பதால், இந்த இளம் நோயாளி வாழ்நாள் முழுவதும் மருந்துகளை சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இனிமேல் இருக்காது என்கின்றனர் மருத்துவர்கள்.
சமனித உடலில் சிறுநீரகங்களுக்கு மேலே இரு அட்ரீனல் சுரப்பிகள் அமைந்துள்ளன. கார்ட்டிசால், ஆல்ட்டோஸ்டெரோன் மற்றும் அட்ரீனலின் ஆகிய ஹார்மோன்களை இச்சுரப்பிகளே உற்பத்தி செய்கின்றன. வளர்சிதை மாற்றம், இரத்த அழுத்தத்தை சீராக்கி ஒழுங்குபடுத்துவதில் இந்த ஹார்மோன்களே முக்கிய பங்காற்றுகின்றன. Pheochromocytoma என்பது, அட்ரீனல் சுரப்பிகளில் உருவாகின்ற ஒரு அரிதான புற்றுக்கட்டி.இருபுற சுரப்பிகளிலும் இத்தகைய கட்டி உருவாவது இன்னும் அரிதானது. Pheochromocytoma காணப்படும் நோயாளிகளில் 10% நபர்களுக்கு மட்டுமே இருபுற புற்றுக்கட்டி உருவாகிறது. Pheochromocytomaக்கு அறுவைசிகிச்சையின் மூலம் அவற்றை அகற்றுவதே விரும்பப்படும் சிகிச்சையாக இருக்கிறது. இந்த நோயாளிக்கு இருபுற திசுக்கட்டிகள் இருந்ததால் அட்ரீனல் சுரப்பிகள் இரண்டையுமே அகற்ற வேண்டிய அவசியம் இருந்தது. அதாவது, வாழ்நாள் முழுவதும் மருந்துகளை சார்ந்திருப்பதை தவிர வேறு வழிமுறை ஏதும் இந்த நோயாளிக்கு இருந்திருக்காது. இத்தகைய சூழ்நிலையில், மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் அறுவைசிகிச்சை நிபுணர்கள், வலதுபுற அட்ரீனல் சுரப்பியை லேப்ராஸ்கோப்பிக் முறையில் அகற்றினர். “cortical-sparing adrenalectomy” என்ற ஒரு நுட்பமான அறுவைசிகிச்சை உத்தியைப் பயன்படுத்திய அவர்கள், ஹார்மோன் பற்றாக்குறை இந்நோயாளிக்கு ஏற்படாமல் இருப்பதற்காக இடதுபுற அட்ரீனல் சுரப்பியின் கார்டெக்ஸ் என்ற புறப்பகுதியை அகற்றாமல், இந்த சிகிச்சையை மேற்கொண்டனர்.
மிகவும் நுட்பமான இந்த அறுவைசிகிச்சைக்கு அறுவைசிகிச்சை திறன்களும், துல்லியமும் தேவைப்படும். 2 மணி நேரங்கள் நீடித்த இந்த அறுவைசிகிச்சையை மருத்துவ இயக்குனரும், குடல் இரைப்பை அறுவைசிகிச்சை துறையின் தலைவருமான டாக்டர். ரமேஷ் அர்த்தனாரி, குடல் இரைப்பை அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். N.மோகன், மயக்கமருந்தியல் துறையின் தலைவர் டாக்டர். மகாராஜன், ஆகியோர் அடங்கிய நிபுணர்கள் குழு வெற்றிகரமாக மேற்கொண்டது. அறுவைசிகிச்சையின்போதும் அதற்குப் பிறகும் எந்த சிக்கல்களும் இல்லை. அறுவைசிகிச்சை முடிந்து ஒரு மாதத்திற்குப் பிறகும் கூட இந்நோயாளியின் இரத்தத்தில் காட்ரிசால் அளவு இயல்பானதாக இருப்பது, இடதுபுற அட்ரீனல் கார்டெக்ஸ் – ன் இயல்பான செயல்பாட்டை சுட்டிக்காட்டுகிறது.
மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி டாக்டர். B. கண்ணன், இந்த அறுவைசிகிச்சை குறித்து கூறியதாவது: “மிக அரிதான இந்த அறுவைசிகிச்சை சாதனையை செய்ததற்காக திறன்மிக்க எமது மருத்துவக் குழுவினரை நான் மனமார பாராட்டுகிறேன். நுட்பமான அறுவைசிகிச்சை செயல்உத்தியை கடைப்பிடித்ததனால் ஸ்டீராய்டு மருந்துகளின் மீது வாழ்நாள் முழுவதும் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து இந்நோயாளியை எமது மருத்துவர்கள் காப்பாற்றியிருக்கின்றனர். சிக்கலான பாதிப்புகளை சமாளித்து, நோயாளிகள் குணம்பெறச் செய்வதில் மேம்பட்ட அறுவைசிகிச்சை உத்திகள் மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையே நேர்த்தியான ஒத்துழைப்பு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வெற்றிகரமான இந்த மருத்துவ சிகிச்சை விளைவு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையும், தரமான வாழ்க்கைத்தரமும் கிடைப்பதை இத்தகைய அம்சங்களே உறுதி செய்கின்றன.”
டாக்டர். ரமேஷ் அர்த்தனாரி பேசுகையில், “இந்நோயாளிக்கு இருபுற அட்ரீனல் திசுக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. வலதுபுற அட்ரீனல் சுரப்பியிலிருந்த கட்டியின் அளவு 10 செ.மீட்டராகவும், இடதுபுற சுரப்பியிலிருந்த கட்டியின் அளவு 2 செ.மீட்டராகவும் இருந்தன. இக்கட்டிகளின் காரணமாக 160/90 mmHg என்ற அதிக இரத்த அழுத்தம் இப்பெண்ணுக்கு இருந்தது. மிகை இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான மருந்துகளை வழங்கி இப்பெண்ணின் இரத்தஅழுத்தத்தை நாங்கள் சீராக்கினோம். கார்டெக்ஸ் – ஐ அகற்றாமல் விட்டுவிடும் அட்ரீனல் அகற்றல் உத்தியைப் பின்பற்றிய நாங்கள், வலதுபுற அட்ரீனல் சுரப்பியை மட்டுமே அகற்றினோம். இயல்பாக செயல்படுகின்ற இடதுபுற அட்ரீனல் சுரப்பியின் கார்டெக்ஸ் – ஐ அகற்றாமல் அப்படியே விட்டுவிட்டோம். இவ்வாறு செய்யவில்லை எனில் வாழ்நாள் முழுவதும் இந்நோயாளி, ஸ்டீராய்டு மருந்துகளை எடுக்கவேண்டி இருந்திருக்கும். இந்த அறுவைசிகிச்சை முழுவதும் லேப்ராஸ்கோப்பிக் முறையில் நடத்தப்பட்டதால், சிகிச்சைக்குப் பிந்தைய வலி பெரிதும் குறைக்கப்பட்டது. அத்துடன், வழக்கமான திறந்தநிலை அறுவைசிகிச்சையோடு ஒப்பிடுகையில், துரிதமாக குணமடைதலும் இதில் சாத்தியமானது. மிகக்குறைந்த ஊடுருவல் கொண்ட இந்த அணுகுமுறையினால் நோயாளி அறுவைசிகிச்சைக்குப் பிறகு மிக வேகமாக இயல்புநிலைக்குத் திரும்பினார். நோயாளியின் வாழ்க்கைத்தரம் இதனால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.” என்று கூறினார்.