மேலும் அறிய
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் எந்தளவில் உள்ளது? - அப்டேட் கொடுத்த அதிகாரி
நகரில் உள்ள பழமையான அடையாளங்கள் பாதிக்கப்படாத வகையில் மதுரை மெட்ரோ இரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

மதுரை மெட்ரோ தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
Source : whats app
மதுரை, கோவை மெட்ரோ ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிப்பதில் கால தாமதம் செய்யவில்லை என மெட்ரோ ரயில்வே மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டம்
மதுரையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, முன்னிலையில் மதுரை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்துதல் குறித்து, தொடர்புடைய ஆகியோருடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் சித்திக் கூறுகையில்..,” மதுரை நகரத்தில் மெட்ரோ இரயில் திட்டம் செயல்படுத்துவதற்காக விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report - DPR) ரூ.11,368 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பின்பு திட்டப் பணிகள் தொடங்கப்படும்.
இந்நிலையில், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துதல் குறித்து, தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் முன்னனி நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடனான ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மதுரை மெட்ரோ இரயில் திட்டத்தின் திட்டச் செயலாக்க நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும் வகையில், நிலத்திட்ட அட்டவணையை முன்கூட்டியே தயாரித்தல், பயன்பாட்டு அடையாளம் காணல், பயன்பாட்டு இடமாற்றம் மற்றும் பங்குதாரர் அங்கீகாரங்களைப் பெறுதல் இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
சுரங்கப்பாதை நிலையங்களுடனும் அமைக்கப்படவுள்ளது
கோயம்புத்தூர் மெட்ரோ மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களின் விரிவான திட்ட அறிக்கை முறையே ரூ.10,740 கோடி மற்றும் ரூ.11,368 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த முன்மொழிவுகளாக ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் தற்போது பரிசீலனையில் உள்ளது. மதுரை நகரம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தொன்மையான நகரமாகும். நகரில் உள்ள பழமையான அடையாளங்கள் பாதிக்கப்படாத வகையில் மதுரை மெட்ரோ இரயில் திட்டம், 26.5 கி.மீ. நீளத்திற்கு 23 உயர்நிலை நிலையங்களுடனும், 5.5 கி.மீ. நீளத்திற்கு 3 சுரங்கப்பாதை நிலையங்களுடனும் அமைக்கப்படவுள்ளது. இந்த மெட்ரோ இரயில் திட்டச் செயலாக்கத்தின் போது நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துவது, நிலம் கையகப்படுத்துதலைக் குறைத்தல் மற்றும் செயல்பாட்டின்போது பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தீர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. மெட்ரோ வழித்தடத்திற்காக சுமார் 38.21 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும். இதில் 20.23 ஹெக்டேர் நிலம் பணிமனை கட்டுமானத்திற்குத் தேவைப்படும். மதுரை மெட்ரோ இரயில் திட்டம் மதுரையில் நகர்ப்புற போக்குவரத்தை கணிசமாக மேம்படுத்தும் என்றும், பொது போக்குவரத்தை மிகவும் திறமையானதாகவும், அணுகக்கூடியதாகவும் இருக்கும்.
மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து 100 மீட்டர் தள்ளி மெட்ரோ ரயில்
மதுரையின் பண்பாட்டு தளங்கள் பாதிக்காத வகையில் பூமிக்கு அடியில் ஐந்தரை கிலோ மீட்டர் தொலைவில் சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து 100 மீட்டர் தள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. மதுரை, கோவை மெட்ரோ இரண்டு திட்டங்களும் சேர்த்து ஒரே திட்டமாக தான் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது, இதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வரை மெட்ரோ ரயில்வே வழித்தடம் நீட்டிக்கும் திட்டம் இல்லை, எதிர்காலத்தில் நீட்டிக்கப்படலாம்" என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை குப்பை மாநகரம் போல் மாறிவிட்டது - நீதிபதி நேற்று வேதனை... இன்று உடனே அகற்றப்பட்ட குப்பைகள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















