தேவையற்ற வார்த்தைகளை பேசும் காவல்துறையினர் - மதுரை போலீஸ் கமிஷனர் வாக்கி டாக்கியில் விடுத்த எச்சரிக்கை
ஒரு சில காவலர்களின் செயலால் கண்விழித்து பணியாற்றும் ஒட்டுமொத்த காவல்துறையினருக்கும் கலங்கம் ஏற்பட்டுவிடுகிறது. - பரவை செக்போஸ்ட் சம்பவத்தை எடுத்துக்கூறி காவல் ஆணையர் அறிவுரை.
பணியின்போது பொதுமக்களிடம் கண்ணியமுடன் நடந்துகொள்ளுங்கள், தேவையற்ற வார்த்தைகளை பேசும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தார்.
வாக்கி டாக்கியில் மதுரை போலீஸ் கமிஷனர்
”காவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” வாக்கி டாக்கி மூலம் காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய மாநகர காவல் ஆணையர். ஒரு சில காவலர்களால் கண் விழித்து பணி செய்யும் அனைத்து காவலர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படும் நிலை உள்ளது. மதுரை மாநகர் கூடல் புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பரவை சோதனை சாவடி பகுதியில் பணிபுரிந்து வந்த சிறப்பு ஆய்வாளரான தவமணி விவசாயி ஒருவரை ஆபாசமாக பேசியது தொடர்பான வீடியோ வெளியாக மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் தவமணியை பணியிடை நீக்கம் செய்த மாநகர காவல் ஆணையர் லோகநாதன், தவமணி மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று மதுரை மாநகர காவல் காவல்துறையினரிடம் வாக்கி டாக்கி மைக் மூலமாக பேசிய மாநகர காவல் ஆணையர் லோகநாதன், “தற்போது அனைவரது கைகளிலும் செல்போன் உள்ளது. ஒரு செக் போஸ்டில் நேற்று நடந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு சென்றுள்ளோம். 24 மணி நேரமும் கண் விழித்து கஷ்டப்பட்டு பணிபுரிகிறோம், ஒரு சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கலங்கத்தை ஏற்படுத்தும் விதமாக சிலர் நடந்துகொள்கிறார்கள்.
சட்டப்படி செய்ய வேண்டியதை செய்ய தான் போகிறோம்
காவல்நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடமும், வாகன சோதனை செய்யும்போது யாருடனும் பேசும்போதும் சட்டப்படி எது சரியானதோ, அதை பற்றி சொல்லும் விதம் உள்ளது. ஆனால் அதை உரத்த குரலில் கத்தி தான் சொல்ல வேண்டும் எனவோ, ஆபாசமான வார்த்தைகளால் சொல்ல வேண்டுமெனவோ கிடையாது. சட்டப்படி செய்ய வேண்டியதை செய்ய தான் போகிறோம். காவல்நிலையங்களுக்கு வரும் மனுதாரர்கள், வாகன சோதனையின்போதும், பேட்ரோல் வாகனங்களில் செல்லும் காவல்துறையினர் என அனைவருமே பொதுமக்களுடன் கண்ணியமுடன் நடந்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கையாகவும் அறிவுறுத்தலாகவும் தெரிவிக்கிறேன். பொதுமக்களிடம் தேவையற்ற வார்த்தைகளை பேசுவது தவிர்க்கப்பட வேண்டும்.
தேவையில்லாத வார்த்தைகள் வேண்டாம்
மதுரை மாநகர காவல் ஆணைய எல்கைக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் (SHORT TEMPER) தேவையில்லாமல் பேசக்கூடிய காவல்துறையினர் குறித்தான விவரங்களை அதிகாரிகள் மூலம் கேட்டுள்ளோம். அதுபோன்ற காவல்துறையினரை தனியாக அழைத்து அவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்படும் எனவும், அதனை மீறியும் தேவையில்லாத வார்த்தைகளை பேசினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்பதற்கு நேற்று நடந்தது சம்பவம் தான் உதாரணம். இதனை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் என காவலர்களிடையே பேசியுள்ளார். இந்த வாக்கி டாக்கி ஆடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Ma Madurai Festival: மதுரை...மதுரை...மதுரை.. மா மதுரை விழாவில் முதல்வர் ஸ்டாலினின் பெருமித பேச்சு - அப்படி என்ன பேசினார்?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - NEET PG Paper Leak: நீட் முதுகலைத் தேர்வு வினாத்தாளை இன்னும் தயாரிக்கவே இல்லை: லீக்கான தகவலுக்கு தேர்வு வாரியம் மறுப்பு