சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்தண்டனை - அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
ராமு மீது கடத்தல், பாலியல் வன்புணர்வு, போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ராமு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
![சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்தண்டனை - அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு Ariyalur Mahila Court sentenced the man who kidnapped and molested girl to life imprisonment tnn சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்தண்டனை - அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/25910061d95d434a2025c05d889e294c1738150230727733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் ராமு என்கிற இளவரசன். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 26.05.2022 அன்று காவல் ஆய்வாளர் சுமதி வழக்கு பதிவு செய்தார்.
விசாரணையில் ராமு சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ராமு மீது கடத்தல், பாலியல் வன்புணர்வு, போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ராமு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கின் இறுதி விசாரணை அரியலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் சார்பில் அனைத்து சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அரியலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி செல்வம் இந்த வழக்கை விசாரித்து ராமுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து காவல்துறையினர் ராமுவை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
போக்சோ சட்டத்தின் நோக்கமே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தண்டிப்பது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தின் அளவை குறைப்பது, குழந்தைகளின் நலன்களைப் பாதுகாப்பது ஆகும்.
இந்த சட்டத்தின் கீழ், பாலியல் வன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல், ஆபாசம், சுரண்டல், துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கான தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம். அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்திய தேசிய குற்ற ஆவண காப்பகத் துறை 2020இல் வெளியிட்ட 2019ஆம் ஆண்டுக்கான தரவுகளில், இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் பதிவான குற்றங்களின் சதவீதம் 35.3.
அதில் உத்தர பிரதேசத்தில் 30, மத்திய பிரதேசத்தில் 18, ஹரியானா, கர்நாடகாவில் தலா 11, தமிழ்நாட்டில் 8, மகாராஷ்டிரா, தெலங்கானா, மேற்கு வங்கத்தில் தலா 6 சிறார் பாலியல் வல்லுறவு கொலை வழக்குகள் பதிவானதாக கூறப்பட்டுள்ளது.
இது தவிர சிறார் கடத்தல், தற்கொலைக்கு தூண்டுதல், காயம் ஏற்படுத்துதல், கொலை முயற்சி, சிசுக்கொலை என வழக்குகளின் எண்ணிக்கை ஒவ்வாரு மாநிலத்திலும் நீளுகின்றன. இப்படி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஏற்பட முக்கிய காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாததுதான். குழந்தைகள் முதல் பெண்கள் வரை தங்களின் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக துணிச்சலாக போராட வேண்டும். இதற்கான விழிப்புணர்வு வேண்டும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)