மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலைகளில் சுற்றி திரிந்த மாடு முட்டி மூன்று பேர் காயம் -  பேத்தியை பார்க்க வந்த முதியவர் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி - கண்ணீர்விட்டு அழுகும் மகள் - உள்ளாட்சி நிர்வாகங்களில் அலட்சியங்களால் தொடரும் இழப்புகள்.
 
சாலைகளில் மாடுகள்
 
மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் பிரதான சாலைகளில் மாடுகள் தொடர்ந்து சுற்றித் திரிவதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. மேலும் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் வாகனங்கள் மீது மோதுவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்தும் உடல் உறுப்புகள்  காயம் ஏற்பட்டு வருகிறது. இதே போன்று பொதுமக்கள் நடந்து செல்லும் போது கால்நடைகள் திடீரென பொதுமக்களை முட்ட செல்வதாலும், அவர்கள் பதறி ஓடிச்சென்று வாகனங்களில் மோதி நடைபெறும், விபத்துகளும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு எதிரே சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று, திடீரென அந்த வழியாக சென்ற மூன்று நபர்களை அடுத்தடுத்து முட்டி தள்ளியதில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது. 
 
 
முதியவரை மாடு முட்டியது
 
இதில் காரைக்குடி திருமயம் பகுதியை சேர்ந்த லெட்சுமணன் (64) என்ற முதியவர் தனது பேத்தியை பார்ப்பதற்காக வந்துவிட்டு டீ கடையில் டீ குடிக்க சென்றபோது காளைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு லெட்சுமணனை முட்டி தள்ளியதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதேபோன்று மதுரையை சேர்ந்த செல்லத்தாயி(65) என்ற மூதாட்டியையும்,  தூய்மை பணிகளில் ஈடுபடும் ஒரு நபரையும் முட்டியது. 
 
காயமடைந்த முதியவர்
 
இதில் காயமடைந்த லெட்சுமணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவரது மகள் தனது தந்தையை நினைத்து கண்ணீர்மல்க கதறி அழுவது காண்போரை கலங்கவைக்கிறது. தனது பேத்தியை பார்க்க வந்த முதியவர் மாடுமுட்டியதில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. அப்பகுதியை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒத்தக்கடை பகுதி மாநகராட்சி எல்கை பகுதி என்பதாலும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் பிரதான சாலையான தி்ருச்சி தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலைகளிலும் மாடுகள் சுற்றி திரிவதால் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.