"திரைப்படங்களில் மாற்றுத்திறனாளிகளை தவறாக சித்தரிக்கக்கூடாது" உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து!
மாற்றுத்திறநாளிகளை உண்மைக்கு புறம்பாகவும், தவறாகவும், இழிவாகவும் சித்தரிப்பதற்கான உரிமையை படைப்பு சுதந்திரம் வழங்கவில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களிலும் காட்சி ஊடகத்திலும் மாற்றுத்திறநாளிகளை கிண்டிப்பதற்கும், உண்மைக்கு புறம்பாகவும், தவறாகவும், இழிவாகவும் சித்தரிப்பதற்கான உரிமையை படைப்புச் சுதந்திரம் வழங்கவிடவில்லை என உச்ச நீதிமன்றம் நேற்று கருத்து தெரிவித்துள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்திய பாலிவுட் திரைப்படம்: இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பில், "மாற்றுத்திறநாளிகளின் உரிமைகளை சிதைக்கும் வகையில் படைப்பின் முழு சாராம்சம் அமைந்திருந்தால், அது பேச்சு சுதந்திரம் அல்ல.
இருப்பினும், சில நேரங்களில், இழிவாக சித்தரிப்பது திரைப்படம் சொல்ல வரும் முக்கிய சாராம்சத்தை நியாயப்படுத்தும் பட்சத்தில் சித்தரிக்கப்பட்டவர்களின் அடிப்படை, சட்ட பூர்வமான உரிமைகளை நியாயப்படுத்தும் வகையில் இயக்குநர்கள் படம் எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள ஆன்க் மிச்சோலி (Aankh Micholi) திரைப்படத்தில் மாற்றுத்திறநாளிகளை தவறாக சித்தரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சமூக ஆர்வலர் நிபுன் மல்ஹோத்ரா, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
ஊனமுற்றவர் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த தடை: வழக்கு விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்திய தலைமை நீதிபதி எழுதியுள்ள அந்த தீர்ப்பில், "மாற்றுத்திறனாளிகளின் தோற்றம், தாழ்வு மனப்பான்மை குறித்து மக்களிடையே இருக்கும் பொது புத்திக்கு எதிராக திரைப்படங்களிலும் காட்சி ஊடகத்திலும் பல நேரங்களில் நகைச்சுவை என்ற சக்திவாய்ந்த ஆயுதம் பயன்படுத்தப்படுகிறது.
சமூக கட்டமைப்பை விமர்சிக்கும் நோக்கில் தங்களை தாங்களே சிறுமைப்படுத்தி கொள்ளும் நகைச்சுவையை மாற்றுத்திறனாளி கதாபாத்திரங்கள் செய்கின்றன" என குறிப்பிடப்பட்டுள்ளது. திரைப்படங்களிலும் காட்சி ஊடகத்திலும் மாற்றுத்திறனாளிகள் குறித்து கட்டுக்கதைகள் எவ்வாறு பரப்பப்படுகிறது என்பதை எடுத்துரைத்த தலைமை நீதிபதி, "குறிப்பிட்ட குறைபாடுள்ளவர்கள், சவால்களை கடந்து சாதனை படைப்பதாக திரைப்படங்களில் காட்டப்படுகின்றன.
ஊனமுற்றவர் உள்பட மாற்றுத்திறனாளிகளை தனிப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. துன்பத்திற்கு ஆளாவர், பாதிக்கப்பட்டவர் என குறிப்பிட்டு அவர்களை அடையாளப்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது. இது, எதிர்மறையான இமேஜை அவர்களுக்கு தருகிறது" என்றார்.
திரைப்பட விதிகளின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் முடிவுகளை எடுக்கும்போது சட்டப்பூர்வமான கமிட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.