தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழ்நாட்டில் 6.16 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை வழங்கப்பட்ட படிவங்களில் 50% படிவங்கள் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் அர்ச்சனா பட்நாயக் கூறினார்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி
தமிழகத்தின் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ் ஐ ஆர் பணிகளின் முன்னேற்றம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாகவும், 6 கோடியே 16 லட்சம் வாக்காளர்களுக்கு எஸ் ஐ ஆர் படிவங்கள் தற்போது வரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்தல் பணியாளர்கள் 83 ஆயிரம் பேர் உட்பட இரண்டு லட்சத்து 45 ஆயிரம் பணியாளர்கள் எஸ் ஐ ஆர் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், 50 சதவீத எஸ் ஐ ஆர் படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு டிஜிட்டல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார் , காரணம் இன்றி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது என்று கூறினார்.
யாருக்கெல்லாம் விண்ணப்பம் வழங்கப்படும்
தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி டிசம்பர் 4ஆம் தேதியோடு முடிவடையும் எனவும், கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்தார். எஸ் ஐ ஆர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டுமே வாக்காளர்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் எனவும் திட்டவட்டமாக கூறினார். ஒரு சட்டமன்ற தொகுதிக்குள் இடம் மாறியவர்களுக்கு எஸ் ஐ ஆர் விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும், ஒரு தொகுதி விட்டு மற்றொரு தொகுதிக்கு மாறிய வாக்காளர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது என தெரிவித்தார்.
தமிழகத்தில் வெளிமாநில வாக்காளர்கள்
எஸ் ஐ ஆர் படிவங்கள் கொடுத்த வாக்காளர்கள் பெயர்கள் கண்டிப்பாக வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்று தெரிவித்தவர், பட்டியலில் நீக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், படிவம் கொடுக்காதவர்கள் என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்படுவார்கள் என கூறினார். தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், தமிழ்நாட்டில் 6.16 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை வழங்கப்பட்ட படிவங்களில் 50% படிவங்கள் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வெளி மாநிலத்தைச் சேர்ந்த 869 பேர் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக கூறிய அவர், சென்னையில் மட்டும் 429 பேர் விண்ணப்பித்துள்ளதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.






















