(Source: ECI/ABP News/ABP Majha)
வீரன் புலியை கொல்லும் போது - புலி, வீரனை தலையில் தாக்கி கொல்லும் அரிதான சிற்பத்துடன் கூடிய நடுகல்
இந்த பகுதி இன்றும் சேர நாட்டிற்கு செல்லும் மங்கம்மாள் பாதை என அழைக்கப்படும் சூழலில் விரிவான அகழாய்வு மேற்கொள்ளும் போது மேலும் பல தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்படும்.
உசிலம்பட்டி அருகே வீரன் புலியை கொல்லும் போது - புலி, வீரனை தலையில் தாக்கி கொல்லும் அரிதான சிற்பத்துடன் கூடிய - 400 ஆண்டு பழமையான புலிக்குத்தி நடுகலை தொல்லியல் ஆய்வாளர் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
வீரக்கல், நடுகல், நினைவுத்தூண், வீரன்கல், சுமைதாங்கிக் கல் எனப் பல வடிவங்களில் பல வகைகளாக, இறந்துபோனவர்களை தியாகிகளாக போற்றிய பண்பாடாக தமிழர் பண்பாடு உள்ளது. 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார், வான் பொய்ப்பினும் தான் பொய்க்காத வள்ளுவர்.
நடுகல் வழிபாடு
இதன் பொருள் என்ன? சிறப்பாக வாழ்ந்தவர் தெய்வத்துக்குச் சமமாக வணங்கப்படுவார் என்பதுதான். அதாவது, தமிழர்கள் ஆதியில் தன்னுடைய முன்னோர்களையே வணங்கி வந்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். இதன் அடையாளமாக எழுந்தவைதான் நடுகல் வழிபாடு. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே வீரன் புலியை கொல்லும் போது - புலி, வீரனை தலையில் தாக்கி கொல்லும் அரிதான சிற்பத்துடன் கூடிய - 400 ஆண்டு பழமையான புலிக்குத்தி நடுகலை தொல்லியல் ஆய்வாளர் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குன்னுத்துப்பட்டியைச் சேர்ந்த சின்னமூப்பர் என்பவரது தோட்டத்து பகுதியில் நடுகல் காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். பெரும்பாலும் தமிழகத்தில் 2 முதல் 3 அடி உயரத்தில் மட்டுமே நடுகற்கள் காணப்பட்டு வரும் சூழலில் இந்த நடுகல் 7 அடி உயரம் 2 அடி அகலம் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. மூன்று பக்கம் சிற்பங்கள் நிறைந்த இந்த நடுகல்லின் முன் பகுதியில் இரண்டு அடிக்கு ஒரு அடுக்கு என 4 அடுக்குகளிலும், பக்கவாட்டில் உள்ள இரு புறமும் 5 அடுக்குகளிலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முன் பகுதியில் உள்ள சிற்பத்தில் ஒரு இனக்குழு தலைவனோ, குறுநில மன்னனோ குதிரையில் வருவது போன்றும், புலியுடன் போராடி புலியை கொல்வது போன்றும், இறந்தவரை இரு தேவதைகள் சொர்க்கத்திற்கு அழைத்து செல்வது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் சிறப்பு வாய்ந்தாகவும் தனித்துவமான சிற்பமாக புலியை வீரன் கொல்லும் காட்சியில், புலியை தனது வாளால் வீரன் கொல்வது போன்றும் அதே வீரனை புலி தலைப்பகுதியில் தாக்கி கடித்து வீரனை கொல்வது போன்றும் தத்துரூபமாக செதுக்கப்பட்டுள்ளது., இது அரிதான காட்சி அமைப்பு கொண்ட சிற்பமாக காணப்படுகிறது.
மேலும் இரு புறமும் உள்ள அடுக்குகளில் வீரனுடன் வந்த படை வீரர்களின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்களின் அடிப்படையில் இந்த புலிக்குத்தி நடுகல் சுமார் 300 முதல் 400 ஆண்டுகள் பழமையான நடுகல்லாக இருக்கக்கூடும் எனவும், இதே போன்று நல்லுத்தேவன்பட்டி அருகே 8 அடி உயரத்தில் புலிக்குத்தி கல் கண்டறியப்பட்ட நிலையில் உசிலம்பட்டி பகுதியில் இரண்டாவதாக மிக உயரமான நடுகல் கண்டறியப்பட்டுள்ளது, இந்த நடுகல்லின் அருகே மேலும் ஒரு நடுகல் புதைந்த நிலையில் காணப்படுகிறது, இந்த பகுதி இன்றும் சேர நாட்டிற்கு செல்லும் மங்கம்மாள் பாதை என அழைக்கப்படும் சூழலில் விரிவான அகழாய்வு மேற்கொள்ளும் போது மேலும் பல தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்படும் என தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ‘ - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு