தனியாக செல்பவர்களிடம் பணத்தை பறிக்க வாளுடன் நின்றவர் கைது - மதுரையில் பரபரப்பு
மதுரையில் தனியாக செல்பவர்களிடம் பணத்தை பறிப்பதற்காக கையில் வாளுடன் சிக்கிய பாஜக நிர்வாகி கைது -29ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்.
மதுரை மாநகர் பி பி குளம் முத்துராமலிங்க தேவர் பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் கடந்த 14 ஆம் தேதி மதுரை மாநகர பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், மதுரை தல்லாகுளம் உலக தமிழ்சங்கம் பகுதியில் இன்று காலை கையில் வாளுடன் ஸ்ரீகாந்த் நின்றுகொண்டிருந்தபோது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட தல்லாகுளம் காவல்துறையினர் ஸ்ரீகாந்தை கையில் வாளுடன் கைது செய்தனர்.
அப்போது ஸ்ரீகாந்திடம் நடத்திய விசாரணையில் ஆடம்பரமாக செலவு செய்வதற்காக கையில் வாளுடன் அந்த வழியாக தனியாக நடந்து செல்லும் நபர்களிடம் வாளை காட்டி பணத்தையும் பொருட்களையும் பறித்து வந்ததாகவும், இன்று காலை பணம் பறிப்பதற்காக வாளுடன் நோட்டமிட்டு காத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஸ்ரீகாந்தை கைது செய்து அவரிடம் இருந்து வாள் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த தல்லாகுளம் காவல்துறையினர், மதுரை மாவட்ட JM2 நீதிமன்ற நீதிபதி கல்யாண் மாரிமுத்து முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வரும் 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 14 ஆம் தேதி ஸ்ரீகாந்துக்கு பாஜகவில் பதவி கொடுக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் கையில் ஆயுதங்களுடன் பணம் பறிப்பதற்காக நின்றுகொண்டிருந்த வழக்கில் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி ஸ்ரீகாந்த் சில நாட்களுக்கு முன்பாக ஆயுதங்களுடன் வீடியோ பதிவு செய்து அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் மீது மதுரை ஆஸ்டின்பட்டி காவல்நிலையம் , திண்டுக்கல் அம்மையநாயக்கனூர் மற்றும் தல்லாகுளம் காவல்நிலையத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.