Parliament Security Breach PM Modi: நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம் - மவுனம் கலைத்த பிரதமர் மோடி, சொன்னது என்ன?
Parliament Security Breach PM Modi: நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் விவகாரத்தில், பிரச்னைக்கான மூலக்காரணத்தை கண்டறிய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Parliament Security Breach PM Modi: நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் ஒரு தீவிரமான விவகாரம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அத்துமீறல் - மோடி கருத்து:
நாளிதழ் (Dainik Jagran) ஒன்றிற்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, “நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற பாதுகாப்பு மீறல் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். அதேநேரம் இது ஒரு "தீவிரமான பிரச்சினை". விபத்து குறித்து வாதிடுவதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் பதிலாக, பிரச்னையை ஆழமாக கொண்டு செல்ல வேண்டியது அவசியம். இதன் தீவிரத்தை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதிகாரிகள் இந்த விஷயத்தில் தீவிரமான மற்றும் ஆழமான விசாரணயை நடத்தி வருவதாகவும், தாக்குதலுக்கான காரணத்தை விரைவில் கண்டுபிடிப்பார்கள். இது ஏன் செய்யப்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த சபவத்தை தீவிரமாக விசாரித்து, இனி இதுபோல் நடக்காத வகையில் தீர்வு காண வேண்டும். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, லோக்சபா சபாநாயகர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார், மேலும் சதி அம்பலப்படுத்தப்படும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம்:
நாடாளுமன்றத்தில் குளிர்க்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 13ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் இரண்டு பேர் அத்துமீறி நுழைந்து வண்ணப் புகைகளை கக்கும் கருவிகளை வீசினர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில், இந்த சம்பவம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது ஆனால் அதற்கு செவி சாய்க்காததால் எதிர்க்கட்சியினர் அமலியில் ஈடுபட்டனர். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது இடைக்கால நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் குளிர்கால தொடர் முழுவது அவர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
விசாரணை தீவிரம்:
நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி செயல்பட்ட விவகாரத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது வரை டெல்லி காவல்துறை தான் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாக விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ”இந்த பிரச்னையை அரசியலாக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றனர். இந்த விவகாரம் விசாரணை வளையத்திற்குள் உள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.