மேலும் அறிய
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தியான மண்டபம்: பக்தர்கள் தியானம் செய்ய தடை ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி!
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில், இணை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட் டு வழக்கை ஒத்திவைத்தனர்.

மீனாட்சியம்மன் கோயில்
மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலில் பூட்டி வைத்து உள்ள தியான மண்டபத்தினை, பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிய பொதுநல மனு மீதான விசாரணையில், மனுதாரரின் மனு குறித்து, மீனாட்சி அம்மன் திருக்கோயில், இணை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயில்
மதுரையில் உள்ள மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் உள்ளூர் முதல் வெளிநாடு வரையிலான லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். இத்தகைய மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயிலில் பூட்டி வைத்து உள்ள தியான மண்டபத்தினை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுத்தாக்கல்
மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த வீ.கருப்பு தாக்கல் செய்த பொது நல மனுவில்...,” மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலானது உலக புகழ்பெற்ற திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயிலுக்குள் தியான மண்டபம் ஒன்று உள்ளது. இத்தியான மண்டபத்தில் பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்து வந்தனர். இத்தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்வதை பக்தர்கள் தொன்றுதொட்டு காலம்காலமாக செய்து வந்தனர். இந்த சூழ்நிலையில் சில ஆண்டுகளாக இத்தியான மண்டபத்தில் பலவிதமான மரப்பொருட்களையும் இரும்பு கம்பிகளையும் வைத்து பக்தர்கள் தியானம் செய்ய முடியாத வகையில் பூட்டி வைத்துள்ளனர். மேலும் பக்தர்கள் இத்தியான மண்டபத்தில் தியானம் செய்ய அனுமதியில்லை என்று கோயில் நிர்வாகம் கூறி வருகிறது. இது பக்தர்களின் மனதினை புண்படுத்தும் செயலாகும். தியான மண்டபம் உள்ளே அடைத்து வைத்துள்ள மரம், இரும்பு மற்றும் வேண்டாத பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தியும், பக்தர்கள் தியான மண்டபத்தினுள் அமைதியாக அமர்ந்து தியானம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
வழக்கு ஒத்திவைப்பு
இந்த மனு நீதிபதிகள் S.M.சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழைய பொருட்களை, தியான மண்டபத்தில் போட்டு வைத்தது ஏன்?. கோயில் வளாகத்தில் வேறு ஒரு இடத்தில் குடோன் அமைக்காதது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, மனுதாரரின் மனு குறித்து, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில், இணை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















