Sivagangai: சிறைச்சாலையில் இயற்கை விவசாய பணி; பார்த்து வியந்த மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர்கள்
இயற்கை விவசாயம் செய்து வரும் திறந்த வெளி சிறைச்சாலையை பார்த்து வியப்படைந்த மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் பார்வையிட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது புரசை உடைப்பு. இங்குள்ள திறந்தவெளி சிறையில் கைதிகள் மூலம் இயற்கை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திறந்த வெளி சிறைச்சாலையை பார்த்து வியப்படைந்த மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் மகிழ்ச்சியடைந்தனர். புரசை உடைப்பு பகுதியில் கடந்த 2013 முதல் திறந்தவெளி சிறைச்சாலை செயல்படுகிறது. 2015 முதல் முழுவீச்சில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. வானம் பார்த்த பூமியாக பார்க்கப்படும் சிவகங்கை மாவட்டத்தில் சவாலாக விவசாயம் செய்யப்படுகிறது. சுமார் 85 ஏக்கர் சிறையில் 35 ஏக்கரில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் இயற்கையாகவே வளர்ந்து நிற்கும் புளியமரம், வேப்பமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளது. வாழை, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, சோளம், நிலக்கடலை உள்ளிட்ட ஏகப்பட்ட விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. 350 தென்னை மரங்கள், 300 கொய்யா மரங்கள், 50 நெல்லி மரம், 40 முந்திரி மரம், 20 பலா மரம், எலுமிச்சை கன்று என ஏகப்பட்ட பலன் தரும் மரங்கள் உள்ளது.
உயர்நீதி மன்ற மதுரைக் கிளை நீதி அரசர்கள் எம்.சுந்தர் மற்றும் நீதி அரசர் ஆர்.சக்திவேல் மற்றும்
கூடுதல் அரசு வழக்கறிஞர் திருவடிக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முழு விவசாய பணிகளையும் பார்வையிட்டனர். மேலும் 500 மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு முதற்கட்டமாக தென்னை மரக்கன்றுகள் நட்டு பணியை துவக்கி வைத்தனர். இச்சிறையில் நீர்ப்பாசன வசதிக்காக அமைக்கப்பட்ட 70 அடி கிணற்றினையும் அதன் மூலம் விவசாய பணிக்காக அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சொட்டுநீர் விவசாயப் பணிகளையும் பாராட்டி சென்றனர். இந்நிகழ்ச்சியில் மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி., பழனி மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் நீதி அரசர்களை வரவேற்று திறந்தவெளி சிறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயப் பணிகள் குறித்து தெரிவித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பனை விதையில் அழகான கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை, அசத்தல் விழிப்புணர்வில் மதுரையின் பசுமை ஆர்வலர்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Southern Railway: இனி கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு வாராந்திர ரயில்! ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!