(Source: Poll of Polls)
பனை விதையில் அழகான கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை, அசத்தல் விழிப்புணர்வில் மதுரையின் பசுமை ஆர்வலர்
பனை விதையிலும் கிறிஸ்துமஸ் பரிசு வழங்கலாம் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ஆம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். பொதுவாக பண்டிகை வந்தாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது வண்ண வண்ண விளக்குகளும், கிறிஸ்துமஸ் மரம், இனிப்புகள், குடில், பரிசுப்பொருள்களும்தான். வீதிகளிலும், அனைத்து வீடுகளிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிப்புகள் கண்களைக்கவரும். மேலும் கிறிஸ்துமஸ் நாள்களில் நண்பர்களை வீடுகளுக்கு அழைத்து மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.
பனை விதையில் கிறிஸ்துமஸ் பொம்மை
ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக இருக்கும். நம் ஊரில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, பனிப்பொழிவு மற்றும் கிறித்துமஸ் மரங்கள் இல்லை என்றாலும், செயற்கையான மரங்கள், நம் ஊரில் வளரும் கிறிஸ்துமஸ் மரங்களை வண்ண விளக்குகளால் அலங்கரித்து கொண்டாடத்தை சிறப்பாக்குவோம் இல்லையா? ஆனால், மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி பனை மரத்தின் மகத்துவத்தை எடுத்துக் காட்ட பனை விதையில் (santa claus) கிறிஸ்துமஸ் தாத்த பொம்மை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
பனை விதைகளில் கிறிஸ்துமஸ் தாத்தா
மதுரையை சேர்ந்த அசோக்குமார் ஐந்துக்கு - 5 அளவு சிறிய அளவிலான கடை ஒன்று வைத்துக் கொண்டு தண்ணீர் கேன் பிஸினஸ் செய்துவருகிறார். ஆனால் அவரது இலக்கு பெரியது. சமூக அர்வலர் அசோக் மதுரையில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து மரக்கன்று நடுதல், விதைப் பந்து தூவுதல், பனை விதை நடுதல் என சமூக பணிகளை செய்து மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். கொரோனா காலகட்டத்தில் வெற்றிலை பாக்கு கொடுத்து விழிப்புணர்வு செய்தார். அது பலரையும் கவர்ந்தது. இந்நிலையில் பனைவிதைகளில் கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இது மதுரை மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.
சமூக விழிப்புணர்வு
இது குறித்து பசுமை செயற்பாட்டாளர் ஜி.அசோக்குமார் நம்மிடம், ”நமது தமிழ் மொழியினை சங்ககாலம் தொட்டு பனை ஓலையில் சுமந்து வந்த மரம் தனது உச்சி முதல் வேர் வரை மனிதனுக்கும் இயற்கைக்கும் பயன் தரும் மரம் நமது மாநில மரமுமான பனைமரம். அதனால் பனை மரத்தை பூலோகத்தின் கற்பக விருட்சம் என்கிறோம். தற்போது அழிவின் இறுதியில் உள்ளது. பனை மரத்தினை நமது அடுத்த தலைமுறையினரின் நலனுக்காக காத்திட வேண்டியது நமது கடமை. பனைமரத்தினை பாதுகாத்திடும் நோக்கில் பல இடங்களில் பனைவிதைகளை நாம் நடவுசெய்து வந்தாலும் பொது மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே பனைவிதைகள் நிறைய நடவுசெய்து பனைமரங்களை உருவாக்கிட இயலும். அந்த முயற்சியில் பனைமரத்தின் மீது சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் நம் முன்னோர்கள் நம்மிடம் கொடுத்துசென்ற பனைவிதையில் பொம்மை செய்யும் முயற்சியில் தாத்தா பொம்மை மட்டுமின்றி பல்வேறு உருவங்கள் உருவாக்கி வருகிறோம்.
இந்நிலையில் மேலும் ஓர் முயற்சியாக வருகின்ற கிறிஸ்மஸ் தினத்தினை முன்னிட்டு பனைவிதையில் கிறிஸ்மஸ் தாத்தா செய்யும் முயற்சியினை சில ஆண்டுகளாக செய்துவருகிறேன். கிறிஸ்துவ தினத்தன்று கிறிஸ்தவ நண்பர்களுக்கு பரிசுபொருளாக வழங்கிட பனை விதையில் கிறிஸ்துமஸ் பொம்மை செய்து வருகிறேன். விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகளவு பொம்மைகள் செய்து கிறிஸ்தவ நண்பர்களுக்கு இலவசமாக வழங்கிடவும் திட்டமிட்டுள்ளேன்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
கிறிஸ்துமஸ் பரிசு வழங்கலாம்
கிறிஸ்துமஸ் வந்தாச்சு..இந்த வார இறுதி கொண்டாட்டம் களைகட்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்டு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக காத்திருப்பார்கள். பரிசுகள், கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் கேக், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட்டம் என்று பண்டிகை காலம் மகிழ்ச்சியாக இருக்கும். பரிசுகள் எல்லாருக்கும் ஆச்சரியத்தை தரக் கூடியதுதான். நமக்காக பரிசுப் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்ற ஆர்வத்தினை போல, கிறிஸ்துமஸ், புத்தாண்டு இம்முறை என்னெவெல்லாம் ஒளித்து வைத்திருக்கிறது என்று ஆவல் அதிகமாக இருக்கும். இந்நிலையில் இப்படியாக பனை விதையிலும் கிறிஸ்துமஸ் பரிசு வழங்கலாம் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் அசோக்குமார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - DMDK Meeting: மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும் : தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம்..