தேங்காய், பழத்தால் சண்டை! உடைந்தது திமுக எம்பி மகனின் மண்டை - மதுரையில் நடந்தது என்ன?
மதுரையில் தேங்காய் கடைக்காரர்களான தந்தையும், மகனும் திமுக எம்பி தங்கத்தமிழ்ச் செல்வனின் மகனின் தலையை அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மக்களவை உறுப்பினர் தங்கத்தமிழ்ச் செல்வன். திமுக எம்.பி.யான இவருக்கு சாந்தி என்ற மகளும், நிஷாந்த் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், மதுரையில் திமுக எம்பியான தங்கத் தமிழ்ச்செல்வனின் மகனின் மண்டையை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தமிழ்ச் செல்வன் மகன்:
நிஷாந்த் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் ஆவார். 30 வயதான நிஷாந்த் மதுரையில் உள்ள லேக் வியூ பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் நேற்று தெப்பக்குளத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
இந்த கோயிலின் வாசலில் தேங்காய், பழம் உள்பட சாமி அர்ச்சனை பொருட்கள் விற்பனை செய்பவர் சமயமுத்து. அவருக்கு வயது 56. அவரது மகன் மணிகண்ட பிரபு, அவருக்கு வயது 25. இவர்களது கடையில் நிஷாந்த் தனது மனைவியுடன் சென்று சாமிக்கு அர்ச்சனை செய்வதற்கு தேங்காய், பழம் வாங்கியுள்ளார்.
தேங்காய் கடைக்காரருடன் சண்டை:
அவர்கள் 2 பழம், ஒரு தேங்காய், வெற்றிலை, பாக்கு கொண்ட தட்டை அளித்துள்ளனர். அதற்கு 90 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. கோயில் நிர்வாகம் அர்ச்சனை தட்டு ரூபாய் 60 என அறிவித்துள்ளது. பின்னர், அர்ச்சனை தட்டில் இருந்த வாழைப்பழம் அழுகியது போன்று இருந்துள்ளது. தேங்காயும் வெடித்தது போல இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, நிஷாந்த் கடைக்காரர்களான தந்தை மற்றும் மகனிடம் கேட்டுள்ளார்.
இதனால், நிஷாந்த் மற்றும் கடைக்கார்களான சமயமுத்து, மணிகண்ட பிரபு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சமயமுத்துவும், மணிகண்ட பிரபுவும் இவர்கள் நிஷாந்த் மீது தேங்காயை வீசியதாக கூறப்படுகிறது. தன்னுடன் தன் மனைவியும் இருந்த காரணத்தால் நிஷாந்த் கடையின் உள்ளே சென்று அவர்களைத் தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது, இது கைகலப்பாக மாறியுள்ளது.
மண்டை உடைந்தது எப்படி?
அப்போது, அங்கே இருந்த நாற்காலியை எடுத்து நிஷாந்த் தலையில் அவர்கள் இருவரும் தாக்கியுள்ளனர். இதில், நிஷாந்தின் தலையில் பலத்த அடிபட்டு அவருக்கு ரத்தம் வழிந்துள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், இதுதொடர்பாக நிஷாந்த் அளித்த புகாரின் அடிப்படையில் தேங்காய் கடைக்காரர்களான தந்தை சமயமுத்துவும், மகன் மணிகண்ட பிரபுவையும் தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் திமுக எம்பி மகனின் தலையை தேங்காய் கடைக்காரர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசுக்கு ஏற்கனவே பல நெருக்கடிகள் உருவாகி வரும் நிலையில், ஆளுங்கட்சி எம்பி மகனின் தலை உடைக்கப்பட்ட சம்பவம் இன்னும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.





















