மேலும் அறிய
கலைஞர் கனவு இல்லம்: 400 ஏழை மக்களுக்கு வீடு கட்டும் பணி துவக்கம்! மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம்!
கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 400 பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கி கட்டிடம் கட்டும் பணிகளை, அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.

கலைஞரின் கனவு இல்லத் திட்டம்
Source : whats app
மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம் தேனூர் ஊராட்சி கட்டப்புளி கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 400 பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கி கட்டிடம் கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
400 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா
இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவிக்கையில்..,” தேனூர் ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலை மிக அருகில் சுமார் 400 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டா மாற்றுத்திறனாளிகள் 121 திருநங்கைகள் 37 மற்றும் பிற 242 ஏழை, எளிய மக்கள் என 400 நபர்களுக்கு பட்டா வழங்கி வீடு கட்டி வழங்குவது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இந்தப் பகுதியில் குடிநீர் வசதிகள், சாலை வசதிகள், தெருவிளக்கு வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் அமைத்து, தமிழ்நாட்டில் முன்மாதிரி கிராமமாக திகழ்வதற்கு மாவட்ட நிர்வாகம் மூலமாக உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
கலைஞரின் கனவு இல்லம் கீழ் 400 வீடுகள்
மேலும் 100 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவாக இக்கிராமம், தமிழ்நாடு முதலமைச்சர் கையால் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கான வீடுகள் வழங்கப்படும். முதற்கட்டமாக 200 வீடுகள் கட்டி தரப்பட உள்ளது. கூடுதலாக 200 வீடுகள் என மொத்தம் 400 வீடுகளும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் கீழ் ரூபாய் 35 லட்சம் மற்றும் கூடுதல் நிதி உதவியுடன் மொத்தத்திற்குள் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் வீடுகள் சிரமம் இல்லாமல் வந்து செல்கின்ற வகையில் வீடுகள் கட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 400 குடும்பங்களுக்கு ஏற்றவாறு தனி நியாய விலை கடை மற்றும் அனைத்து வசதிகள் கூடிய பூங்கா அமைக்கப்படும். வளர்ச்சி திட்டப் பணிகள் அனைத்தும் மக்கள் தொகையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதால் இங்கு வீடு வழங்கப்பட்டவுடன் இங்கு வசிக்கக்கூடியவர்கள் இங்க உள்ள நியாய விலை கடையில் தங்களை இணைத்து கொள்ளவேண்டும். இதன் மூலம் இப்பகுதிக்கான வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ள உறுதுணையாக இருக்கும். இங்கு நடைபெறவிருக்கும் கட்டடப் பணிகள் அனைத்தும் முறையாக சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அலுவலர்கள் தரமாகவும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அமைப்பதற்கு தொடர்ந்து கண்காணிப்பார்கள்.
பூங்கா மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கு உபகரணம்
வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் கட்டடப் பணிகள் மேற்கொள்வதை பார்வையிட வேண்டும். நீண்ட நாட்களாக குடியிருப்பவர்களுக்கு அரசு பட்டா வழங்கி அரசின் திட்டங்கள் மூலம் வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இன்று புதிதாக இடம் தேர்வு செய்து அவ்விடத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகளை அரசே அமைத்து கொடுப்பது இதுவே முதல் முறையாகும். வீடுகளுக்கான வரைபடம் மற்றும் முகப்பு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தப்பட்டு புதிய முகப்புடன் கூடிய வீடுகள் கட்டித்தரப்பட ள்ளன. ஒரு பயனாளிக்கு 436 சதுர அடி அளவில் மனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அரசு வழிகாட்டி மதிப்பு ரூ.2 இலட்சம் ஆகும். வீட்டின் மொத்த அளவு 360 சதுர அடி 300 சதுர அடி கான்கிரீட் கூரையும், 60 சதுர அடி தீப்பிடிக்காத கூரை வேயப்பட உள்ளது. சுமார் 18 சென்டில் பூங்கா மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கு உபகரணங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
முறையான சாலை வசதி
மேலும் நான்கு வழிச்சாலையிலிருந்து இக்குடியிருப்பை அடைவதற்குரிய சாலை நெடுகிலும் மரக்கன்று நடுதல் சுற்றிலும் தடுப்புச்சுவர் கட்டுதல், தெரு விளக்குகள் அமைத்தல், உரிய கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்துதல் தேவையான போர்வெல் அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல். மின்மாற்றி அமைத்தல், மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல். குறுக்கு தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைத்தல். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தனியாக பூங்கா அமைத்தல். முக்கியமான பிரதான சாலையில் இரண்டு அடுக்கு தார்ச்சாலை அமைத்தல் என பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன” எனத் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















