மேலும் அறிய
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு! கிரஷர் குவாரி அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த கைது சம்பவத்தால் பரபரப்பு.

கைது செய்யப்பட்ட தாசில்தார் மற்றும் ஓட்டுநர்
Source : whats app
மதுரையில் கிரஷர் குவாரி அனுமதி வழங்க 70 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக தெற்கு வட்டாச்சியர் மற்றும் ஓட்டுனர் ஆகிய இருவர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
ஒரு லட்சம் லஞ்ச பேரம்
மதுரை மாவட்டம் தெற்கு தாலுகாவிற்கு உட்பட்ட குசவபட்டி கிராமத்தில் கிரஷர் குவாரி வைப்பதற்காக அனுமதி கோரி மதுரை சின்ன உடைப்பை சேர்ந்த ரத்னம் என்பவர் விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து வருவாய்த்துறை மற்றும், நல அளவை, கனிமவளத்துறை அதிகாரிகள் நேரடி கள ஆய்வு முடிந்துள்ளது. இதையடுத்து கிரஷர் குவாரிக்காக அனுமதி கிடைக்காமல் தாமதமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கிரஷர் குவாரிக்கான அனுமதி குறித்து ரத்னம் மதுரை தெற்கு வட்டாச்சியர் ராஜபாண்டியிடம் கேட்டபோது, முதலில் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் குறைந்தபட்சம் 70 ஆயிரம் ரூபாயாவது கொடுக்க வேண்டும் என ரத்தினத்திடம் வட்டாட்சியர் ராஜபாண்டி லஞ்ச பேரம் பேசியுள்ளார்.
70 ஆயிரம் ரூபாய் ரசாயனம் தடவிய பணம்
அதன்படி தெற்கு வட்டாச்சியர் ராஜபாண்டியை தொடர்புகொண்டபோது இன்று 70 ஆயிரம் ரூபாய் பணம் கொண்டுவருமாறு கூறியுள்ளார். இதையடுத்து வட்டாட்சியர் லஞ்சம் கேட்பது குறித்து ரத்னம் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரத்னத்திடம் 70 ஆயிரம் ரூபாய் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பி பின் தொடர்ந்து கண்காணித்தனர். இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற ரத்னம் வட்டாச்சியர் இல்லாத நிலையில் அவரை தொடர்புகொண்டு கேட்டுள்ளார்.
கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்
அப்போது மாலை பணத்துடன் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு வருமாறு கூறியதையடுத்து மீண்டும் மாலை 6 மணியளவில் தெற்கு வட்டாச்சியர் அலுவலகத்திற்கு சென்ற ரத்னம் ரசாயனம் தடவியே 70 ஆயிரம் ரூபாய் பணத்தை வட்டாட்சியரிடம் கொடுத்துள்ளார். அப்போது இந்த பணத்தை தனது ஓட்டுநர் ராம்கேவிடம் வழங்குமாறு வட்டாட்சியர் கூறிய நிலையில் ரத்தினம் ஓட்டுநர் ராம்கிகேவிடம் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது பின்னால் இருந்து கண்காணித்துகொண்டிருந்த லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி சத்யசீலன் தலைமையிலான காவல்துறையினர் ஓட்டுநர் ராம்கி மற்றும் தெற்கு வட்டாட்சியர் ராஜபாண்டி ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து வட்டாட்சியர் ராஜபாண்டி மற்றும் ராம்கி ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்திவருகின்றனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வட்டாட்சியரை லஞ்சம் பெற்றதாக கையும் களவுமாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















