மதுரை : பொய் வழக்கு.. அடிச்சே கொன்னாங்க.. சாத்தான்குளம் விவகாரத்தில் காவல் அதிகாரி எழுதிய கடிதம்!
நான் இருந்தால் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் உண்மையை நீதிமன்றத்தில் சொல்லிவிடுவேன் என்று கருதி என்னை அடித்து கொலை செய்ய பல வகையில் திட்டம் தீட்டி வருகிறார்கள்
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் இருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மார்ச் 2022 ஆம் வருடம் மார்ச் 30ஆம் தேதி சிறை அதிகாரிகள் மூலமாக சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், சாத்தான்குளம் வழக்கில் என்னை தவிர்த்து 8 காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் இருக்கிறோம். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் கொடூரமான முறையில் அடித்து பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் தந்திரமாக அடைத்ததனால் மேற்படி இருவரும் இறந்து விட்டார்கள் அது சம்பந்தமாக நான் மேற்படி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் A2 to A9 வரையிலானவர்களிடம் ஏன் சாகும் அளவிற்கு அடித்து கொலை செய்து விட்டு என்னையும் வழக்கில் மாட்டி விட்டீர்கள் என்று கேட்பதில் தகராறு ஏற்பட்டு அது முதல் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 2-7-2020 ஆம் தேதி முதல் நான் மட்டும் ஒரு பிரிவாகவும் மற்ற A2 முதல் A9 வரை உள்ள எதிரிகள் 8 பேரும் ஒரு பிரிவாகவும் சிறையில் இருந்து வருகிறோம்.
இதனால் மற்றவர்கள் எனக்கு நேரடியாக இதனால் இந்த வழக்கில் என்னை தவிர்த்து குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 காவலர்கள் எனக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டியும் அடிக்கவும் முற்பட்டார்கள். மேலும் கணம் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வரும்போது மீண்டும் சிறைக்கு போகும் போதும் எனக்கு பல வகைகளில் அவர்கள் அனைவரும் இடையூறுகள் செய்து கொண்டே வருகிறார்கள். அவர்களின் இடையூறுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. நான் இருந்தால் உண்மையை கணம் நீதிமன்றத்தில் சொல்லிவிடுவேன் என்று கருதி என்னை அடித்து கொலை செய்ய பல வகையில் திட்டம் தீட்டி வருகிறார்கள்.
மேலும் இந்த வழக்கில் சம்பந்தபட்டவர்கள் இந்த வழக்கில் கைதாவதற்கு நான் காவல்துறைக்கு உதவி செய்த காரணத்தாலும் அவர்கள் என் மீது விரோதம் கொண்டுள்ளார்கள். மேலும் உண்மையை மட்டுமே பேசவேண்டும் சாகும்வரை பொய் பேசக்கூடாது என்ற கொள்கையோடு வாழ்ந்து வரும் எனக்கு மேற்படி எதிரிகள் பல வகையில் இடையூறு செய்து வருகிறார்கள். அதனால் நான் ஜாமீன் கேட்டும் என்னை கோவை சிறைக்கு மாறுதல் செய்ய கோரியும் அல்லது மதுரை சிறையிலேயே மேற்படி எதிரிகளுடன் சேர்ந்து இல்லாமல் வேறு ஒரு பிளாக்கிற்கு மாறுதல் கேட்டு வந்தேன் அதற்கு எந்த நிவாரணமும் இல்லை
அதற்கு எந்த நிவாரணமும் கிடைக்காததால் நான் மன உளைச்சலில் இருந்து வருகிறேன். 26-3-2022 ம் தேதி காலை ஆறு முப்பது மணிக்கு சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் A6 A4 A7 A9 ஆகியவர்கள் என்னை கேவலமான வார்த்தைகளால் திட்டி நேரடியாக சுமார் 10 நிமிடம் திட்டி என்னை அடிக்க வந்தார்கள். அந்த சம்பவம் சிறையில் இருந்த சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. மேலும் ஒவ்வொரு வாய்தாவுக்கு நீதிமன்றத்திற்கு அவர்களுடனேயே சிறையில் தணிக்கை செய்யும் போதும் கணம் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஒரே எஸ்கார்ட் வாகனத்தில் வரும் போதும் செல்லும்போதும் சிறையில் தணிக்கை செய்யும் போதும் மேற்படி எதிரிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு என்னை மிகவும் கேவலமாக திட்டி வருகிறார்கள். மேலும் கணம் நீதிமன்றத்தில் மதிய சாப்பாடும் அவர்களுடன் ஒரே வாகனத்தில் சாப்பிடும் பொழுது மேற்படி எதிரிகள் தொடர்ந்து கேவலமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு சென்றுவர அவர்கள் செல்லும் எஸ்கார்ட் வாகனத்தில் அவர்களுடன் ஒன்றாக சென்று வராமல் தனியாக சென்று வர Sepearate Escort with Vehicle வழங்க உத்தரவிடுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இதேபோல பிரச்சனையால் கச்சநத்தம் கொலை வழக்கில் மதுரை சிறையில் இருப்பவர்கள் இரண்டு தனித்தனியாக போலீஸ் எஸ்கார்ட் வாகனம் மூலம் சிவகங்கை நீதிமன்றத்திற்கு இரு பிரிவாக சென்று வருகிறார்கள் என்பதை தங்கள் கவனத்திற்கு தெரிவிக்கிறேன்.
எனவே எனக்கு மட்டும் தனியாக நீதிமன்றம் விசாரணைக்கு Sepearate Escort with Vehicle வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். என 2022 ஆம் வருடம் மார்ச் மாதம் 27ம் தேதி அவர் கைப்பட எழுதி 2022 ஆம் வருடம் மார்ச் 30ஆம் தேதி சிறைத்துறை அதிகாரிகள் மூலம் நீதிபதிக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.ஆனால் நீதிமன்ற வட்டாரங்களிலும் , காவல்துறையின் உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்த பொழுது இந்த கடிதம் ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே நீதிபதியிடம் கொடுக்கப்பட்டது. இந்த கடிதம் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என நீதிபதி கடிதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
மேலும் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் இது போன்ற காரணங்களைச் சொல்லி அதாவது சாத்தான்குளம் கொலை வழக்கு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை என அவசர அவசரமாக விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இவர் தனக்கு மதுரை சிறையில் சரியான சவுகரியங்கள் இல்லை அது போக தன்னுடன் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் காவலர்களால் தனக்கு தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை . மேலும் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது அசௌகரியங்கள் ஏற்படுகிறது.
ஆகவே தன்னை கோவை சிறைக்கு மாற்ற வேண்டும் அல்லது மதுரை சிறையில் தனக்கு வேறு ஒரு பிளாக் வழங்க வேண்டும் அல்லது நீதிமன்றத்திற்கு வரும்பொழுது தனி வாகனத்தில் அழைத்து வரவேண்டும் என்றெல்லாம் நேரடியாக நீதிபதியிடம் கேட்டும் அதை நீதிபதி ஏற்க மறுத்து விட்டதாக நீதிமன்ற வட்டாரங்களும் காவல்துறையின் உளவுத்துறை வட்டாரங்களும் தகவல்கள் தெரிவிக்கின்றன.