வெளுத்து வாங்கும் கனமழை; கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் கும்பக்கரை, மேகமலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் அவதியடைந்தனர். விவசாயிகளும் கடுமையான வெயிலால் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் ஆறு, அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். கடந்த சில நாட்களாக அருவியில் நீர்வரத்து சீராக இருந்தது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அருவியின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை பெய்தது.
இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். அருவியில் நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து சீரான பிறகு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறையினர் கூறினர். இதேபோல், கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு கிராமத்தில் மேகமலை அருவி அமைந்துள்ளது.
இந்த அருவிக்கு மேகமலை வனப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். கடந்த சில மாதங்களாக போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் அருவி நீர்வரத்து இன்றி காணப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் மேகமலை வனப்பகுதியில் பெய்த சாரல் மழையால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அருவியில் நீர்வரத்து ஏற்பட்டது. இதையடுத்து தேனி மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அருவிக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மேகமலை வனப்பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நேற்று காலையில் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேகமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதற்கிடையே நேற்று அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் திடீரென விதிக்கப்பட்ட தடையால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.