IOC suspends Russia: ரஷ்யாவிற்கு விழுந்த பேரிடி - ஒலிம்பிக் சங்கத்தை இடைநீக்கம் செய்தது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில்
IOC suspends Russia: ரஷ்ய ஒலிம்பிக் சங்கத்தை இடைநீக்கம் செய்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
IOC suspends Russia: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்து, அந்நாட்டின் ஒலிம்பிக் சங்கத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் இடைநீக்கம் செய்துள்ளது.
ரஷ்ய ஒலிம்பிக் கவுன்சில் இடைநீக்கம்:
சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஒசி) கூட்டம் மும்பையில் வரும் 15ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரையில் 3 நாட்கள் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அந்த அமைப்பின் இரண்டு நாள் செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. அதில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன. அதன் முடிவில், ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியை இடைநீக்கம் செய்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
கடந்த ஆண்டு அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை முன்னெடுத்தது. அதனை தொடர்ந்து, கிழக்கு உக்ரைனில் பகுதியில் டொனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க் மற்றும் சபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களில் உள்ள விளையாட்டு அமைப்புகளை ரஷ்யா தங்களுடன் இணைத்துக் கொண்டது. ”இது நாடுகளின் ஒருமைப்பாடு குறித்த ஒலிம்பிக் சாசனத்தை மீறிய செயல்” என கூறி சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் ஆனது ரஷ்ய ஒலிம்பிக் சங்கத்தை இடைநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து, ஒலிம்பிக் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டிக்கு இனி தேசிய ஒலிம்பிக் கமிட்டியாக செயல்பட உரிமை இல்லை. மேலும் ஒலிம்பிக் இயக்கத்திடம் இருந்து எந்த நிதியுதவியும் பெற முடியாது.
சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிக்கை:
இந்த இடைநீக்க நடவடிக்கையானது ரஷ்யாவை சேர்ந்த வீரர்கள் எந்த நாட்டையும் சேராத நபர்களாக, போட்டிகளில் பங்கேற்பதில் எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது இன்னும் மாறக்கூடும் என்று ஐஓசி தெரிவித்துள்ளது. பாரீஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் மிலானோ கோர்டினா 2026 குளிர்கால ஒலிம்பிக்ஸிலும் ரஷ்ய பாஸ்போர்ட்டுடன் தனிநபர்களாக விளையாட்டு வீரர்கள் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கும் உரிமை ஐஓசிக்கு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் நிலை என்ன?
2024 கோடைகால ஒலிம்பிக் மற்றும் 2026 குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷ்ய தனிப்பட்ட விளையாட்டு வீரர்களின் சாத்தியமான பங்கேற்பைப் பொருத்தவரை இந்த நடவடிக்கை எதையும் மாற்றாது. அடுத்த ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக்ஸில் ரஷ்யா மற்றும் பெலாரஸை சேர்ந்த வீரர்கள், எந்த நாட்டையும் சேராதவர்களாக பங்கேற்கலாம் என கடந்த மார்ச் மாதமே தெரிவித்தது குறிப்பிடத்தகக்து. உக்ரைன் மீதான போரின் காரணமாக ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பியா நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதனை தனிமைப்படுத்தும் முயற்சியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சர்வதேச விளையாட்டு அமைப்பான ஒலிம்பிக் கவுன்சிலிலிருந்து ரஷ்ய ஒலிம்பிக் சங்கம் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பது அந்நாட்டிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.