கொடைக்கானல்: 6 மாதங்களாக நடைபெறாத ஊராட்சி மன்ற கூட்டம்; கூட்டம் நடந்ததாக உறுப்பினர்களிடம் கையெழுத்து
கொடைக்கானல் அருகே உள்ள கூக்கால் கிராமத்தில் ஆறு மாதங்களாக நடைபெறாத ஊராட்சி மன்ற கூட்டம். கூட்டம் நடத்தப்பட்டதாக உறுப்பினர்களை இருளில் வைத்து கையெழுத்து வாங்கிய ஊராட்சி செயலாளர்.
கொடைக்கானல் அருகே உள்ள கூக்கால் கிராமத்தில் ஆறு மாதங்களாக நடைபெறாத ஊராட்சி மன்ற கூட்டத்திற்கு, கூட்டம் நடத்தப்பட்டதாக உறுப்பினர்களை இருளில் வைத்து கையெழுத்து வாங்கியுள்ளார் ஊராட்சி செயலாளர். இக்கிராமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக வார்டு உறுப்பினர்களே புகார் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் அமைந்துள்ளது கூக்கால் என்ற கிராமம். இந்த கிராமத்தில் 9 வார்டுகள் உள்ளது. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பேற்றனர். ஊராட்சி மன்ற தலைவராக வளர்மதி மாயன் என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் வழக்கமாக 60 நாட்களுக்கு ஒரு முறையாவது ஊராட்சி மன்ற கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற வேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால் கடந்த ஆறு மாதமாகவே கூக்கால் ஊராட்சியில் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெறவில்லை என்று வார்டு உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். கூட்டத்தில் பங்கேற்கும் பொழுது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இந்த தீர்மானங்களில் வார்டு உறுப்பினர்கள் கையெழுத்து இடுவர். ஆனால் கடந்த ஆறு மாதமாகவே கூட்டம் நடைபெறவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த உடனேயே வார்டு உறுப்பினர்களை அழைத்து இருளில் வைத்து வெவ்வேறு காரணங்கள் கூறி போலியாக கூட்டம் நடத்தப்பட்டதாக ஊராட்சி செயலாளர் கையெழுத்து வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Donald Trump: ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் .. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது
மேலும் ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே கையெழுத்திட்ட நிலையில் மீதி உள்ள உறுப்பினர்கள் யாரும் கையெழுத்திடவில்லை. மேலும் கூக்கால் ஊராட்சியை பொருத்தவரையில் பல்வேறு பணிகள் நடைபெற்றதாக கூறி கோடிக்கணக்கில் முறைகேடுகளும் நடந்துள்ளதாக வார்டு உறுப்பினர்களை கூறி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் ஆதாரப்பூர்வமாக பல்வேறு இடங்களில் வேலை நடைபெறாமல் இருந்தும் வேலை நடைபெற்றதாக கூறி ஊராட்சியில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ள நகல்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஜூன் மாதம் முழுமையாக முடிவடையும் - கனிமொழி எம்பி தகவல்
போலி கையெழுத்திட்டு கூட்டம் நடைபெற்றதாகவும் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் வார்டு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று வார்டு உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மேலும் முறைகேடு புகார் மற்றும் போலி கையெழுத்து வாங்கியது குறித்து முறையாக விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்