CM Stalin: சிங்காரச் சென்னை என்பது நான் மேயராக முன்வைத்த முழக்கம் - வீடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் பல்வேறு பூங்காக்கள் உள்ளன. அதில் மிகப்பழமையான பூங்காக்களில் ஒன்று செனாய் நகரில் அமைந்துள்ள திரு.வி.க. பூங்கா.
சென்னையில் பல்வேறு பூங்காக்கள் உள்ளன. அதில் மிகப்பழமையான பூங்காக்களில் ஒன்று செனாய் நகரில் அமைந்துள்ள திரு.வி.க. பூங்கா. இப்பூங்காவின் பரப்பளவு மட்டும் 8.8 ஏக்கர். சென்னை மாநரகரில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரெயில் பணிக்காக இப்பூங்கா 2011-ம் ஆண்டில் மூடப்பட்டது. மிகவும் பழமையான பூங்கா என்பதால் இங்குள்ள மரங்களும் பழமையானவை. இந்த பூங்காவில் மட்டும் மொத்தம் பழமையான 328 மரங்கள் இருந்தன. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் மெட்ரோ பணிக்காக வெட்டப்பட்டது. இந்த பூங்காவிற்கு அழகு சேர்த்து வந்த மரங்களில் பாதி வெட்டப்பட்டதால், பூங்காவிற்கான எழில் குறைந்து காணப்பட்டது.
இதனாலேயே, புதுப்பொலிவுடன் மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளுடன் இந்த பூங்காவை நவீன முறையில் மேம்படுத்தியது. இந்த மேம்படுத்துதல் பணிகள் கடந்த 2018- ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 18 கோடி ரூபாய் செலவில் சென்னை செனாய் நகரில் மெட்ரோ ரெயில் நிறுவனத்தால்புதுப்பிக்கப்பட்ட திரு.வி.க. பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (04/04/2023) மாலை திறந்து வைத்தார்.
நவீன வசதிகளோடு மேம்படுத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களுடன் இந்தப் பூங்கா மேம்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இன்று மாலை முதல் பூங்காவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பூங்காவில் குழந்தைகள் பூங்கா, திறந்தவெளி திரையரங்கு, படிப்பகம், சறுக்கு பயிற்சி, மட்டைப்பந்து பயிற்சிக்கூடம், நடைபயிற்சி பாதை, பல வண்ண இசை நீரூற்றுகள் என பல்வேறு பொழுது போக்கு அமைக்கப்பட்டு உள்ளன.
#SingaraChennai என்பது நான் மேயராக முன்வைத்த முழக்கம்!
— M.K.Stalin (@mkstalin) April 4, 2023
அடுத்து, அமைச்சர் - முதலமைச்சர் என திட்டங்கள் வகுத்து அழகு மிளிர சென்னையை உருவாக்கினோம்.
இன்று #ShenoyNagar தமிழ்த் தென்றல் திரு.வி.க. பெயரிலான பூங்காவில் எழில் தென்றல் வீச சீரமைத்துள்ளோம்! pic.twitter.com/GWxRMYm4jy
இந்த நிகழ்வுக்குப் பிறகு முதலமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில், ”சிங்காரச் சென்னை என்பது நான் மேயராக முன்வைத்த முழக்கம்! அடுத்து, அமைச்சர் - முதலமைச்சர் என திட்டங்கள் வகுத்து அழகு மிளிர சென்னையை உருவாக்கினோம். இன்று செனாய் நகரில் தமிழ்த் தென்றல் திரு.வி.க. பெயரிலான பூங்காவில் எழில் தென்றல் வீச சீரமைத்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.