தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஜூன் மாதம் முழுமையாக முடிவடையும் - கனிமொழி எம்பி தகவல்
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பணிகளை கடந்த 2 ஆண்டுகளாக விரைவுபடுத்தி முடிவுறும் நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் அனைத்தும் வரும் ஜூன் மாதத்துக்குள் முழுமையாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தலைமை வகித்தார். தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பேருந்து நிலையம், வணிக வளாகம், சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், கழிவுநீர் கால்வாய் பணிகள், பூங்கா பணிகள் போன்ற பல்வேறு பணிகளில் தற்போதைய நிலை குறித்து கனிமொழி எம்பி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
குறிப்பாக தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்திய கனிமொழி எம்பி, தூத்துக்குடி நகரில் ஏற்படும் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் கூறும்போது,மாநகராட்சி பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் தலா 50 சதவீத பங்களிப்புடன் ரூ.1000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் ரூ.952 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதில் விவிடி பிரதான சாலை உள்ளிட்ட சில பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.மேலும், பெரும்பாலான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. மிகவும் தாமதமான நிலையில் நடைபெற்று வந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளை கடந்த 2 ஆண்டுகளாக விரைவுபடுத்தி முடிவுறும் நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் அனைத்து பணிகளும் வரும் ஜூன் மாதத்துக்குள் முழுமையாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ்குமார், மாநகராட்சி பொறியாளர் பாஸ்கர் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.