Donald Trump: ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் .. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது
2016 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் ஒன்று ட்ரம்புக்கு பெரிய தலைவலியாகவும், அவரது அரசியல் எதிர்காலத்தையே பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் அடிப்படையில் ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் பொழுதுபோக்கு மல்யுத்த போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ட்ரம்ப் 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்துள்ளார். இவர் அடுத்த ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். இதனிடையே 2016 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் ஒன்று ட்ரம்புக்கு பெரிய தலைவலியாகவும், அவரது அரசியல் எதிர்காலத்தையே பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாச பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ் சொந்த வாழ்க்கைப் பற்றி புத்தகம் ஒன்றை எழுதினார். அதில் 2006 ஆம் ஆண்டு ஒரு கோல்ஃப் போட்டியின் போது டொனால்ட் ட்ரம்பை தான் சந்தித்ததாக தெரிவித்தார். அப்போது தனக்கு 27 வயது ஆன நிலையில், ட்ரம்புக்கு 60 வயது ஆகியிருந்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
நான் ட்ரம்பை சந்தித்தப்போது அவரது மூன்றாவது மனைவி மெலனியாவுக்கு ஆண் குழந்தை பிறந்து 4 மாதங்கள் தான் ஆகியிருந்தது. ட்ரம்பின் பாதுகாவலர்கள் தன்னை ஒருநாள் பென்ட்ஹவுஸில் இரவு விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். நானும் சென்றேன். அங்கு ட்ரம்ப் ரியாலிட்டி ஷோவான ‛செலிபிரிட்டி அப்ரண்டீஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்படி டொனால்ட் என்னிடம் கேட்டதோடு, என்னை விரும்புவதாகவும் சொன்னார். இருவரும் சம்மதத்தோடு உடலுறவு வைத்துக் கொண்டதாகவும் ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து டிரம்ப் தனக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும், ஜூலை 2007 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெவர்லி ஹில்ஸ் ஹோட்டலில் "செலிபிரிட்டி அப்ரண்டிஸ்" பற்றி விவாதிக்க அவரது வேண்டுகோளின் பேரில் அவரை மீண்டும் சந்தித்ததாகவும் ஸ்டோர்மி டேனியல்ஸ் கூறியுள்ளார். ஆனால் இந்த முறை உடலுறவு கொள்ள விரும்புவதாக ட்ரம்ப் கூறிய நிலையில் தான் மறுத்துவிட்டேன். இதனால் ஒரு மாதம் கழித்து டிரம்ப் தனக்கு போன் செய்து "செலிபிரிட்டி அப்ரண்டிஸ்" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பை தர முடியவில்லை என தெரிவித்ததாக கூறியிருந்தார்.
தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு
இதன்பின்னர் ஸ்டோர்மி டேனியல்ஸை ட்ரம்ப் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் 2016 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக இருவருக்குமிடையேயான தொடர்பு குறித்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. அப்போது ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். ஸ்டோர்மி பிரச்சினை அவரின் வெற்றியை பாதிக்கும் வகையில் இருந்தது.
இதனால் இதுதொடர்பாக ஸ்டோர்மி வாயை திறக்காமல் இருக்க அவருக்கு இதற்காக பேரம் பேசி 1.30 லட்சம் அமெரிக்க டாலர்களை தனது வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் ஸ்டோர்மியின் வழக்கறிஞர் கீத் டேவின்சனிடம் வழங்கப்பட்டது. இதற்காக பணம் பிரச்சார நிதியில் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே 2018 ஆம் ஆண்டு சிபிஎஸ் நிகழ்ச்சியில் ஸ்டோர்மி டேனியல்ஸ் நிகழ்ச்சியில் ட்ர்ம்ப் உடனான உறவு குறித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
சரணடைந்த டொனால்ட் ட்ரம்ப்
இந்த வழக்கில் ட்ரம்ப் மீதான ஆதாரங்கள் வலுவாக இருந்ததால் அவர் தான் கைது செய்யப்படலாம் என முன்கூட்டியே கணித்திருந்தார். இதனிடையே மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்த ட்ரம்ப் இதற்காக தனி விமானத்தில் நியூயார்க் நகருக்கு நேற்று முன்தினம் (ஏப்ரல் 3) ஆம் தேதி சென்றார். நீதிமன்றத்தில் ஆஜரான அவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் ட்ரம்புக்கு கைவிலங்கு போடப்படவில்லை. இதன்மூலம் குற்றவியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் என்ற அவப்பெயரை டொனால்ட் ட்ரம்ப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை டிசம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்குப் பின் தனது ஆதரவாளர்களிடையே பேசிய ட்ரம்ப், "நம் நாடு நரகத்திற்குப் போகிறது. உலகம் ஏற்கனவே வேறு பல காரணங்களுக்காக நம்மைப் பார்த்து சிரிக்கிறது” என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், “நம் நாடு நரகத்திற்கு போகிறது. நான் செய்த ஒரே குற்றம், நம் தேசத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக அச்சமின்றி பாதுகாத்ததுதான்” எனவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.