மேலும் அறிய
காரைக்குடி ரயில் நிலையம்: ரூ.20 கோடி செலவில் புதுப்பொலிவு, பயணிகளுக்கு காத்திருக்கும் ஆச்சரியங்கள்!
கண் கவர் 'கால்வேல்யூம்' தகடுகளால் ஆன நடைமேடை மேற்கூரைகள், முதல் நடைமேடை தரைதள மேம்பாடு, மின்னணு தகவல் பலகைகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி ரயில் நிலைய
Source : whatsapp
காரைக்குடி ரயில் நிலையம் ரூபாய் 20 கோடி செலவில் மறு சீரமைப்பு.
அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் காரைக்குடி ரயில் நிலையம் சீரமைப்பு
காரைக்குடி ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூபாய் 20.34 கோடி செலவில் நடைபெற்று வந்த மறுசீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று விட்டன. காரைக்குடி செட்டிநாடு கட்டடக்கலை மற்றும் பர்மா தேக்கு மரத்தால் கட்டப்பட்ட மாளிகைகள், தனித்துவமான சமையல் பதார்த்தங்கள், ஆத்தங்குடி தரைதள ஓடுகள் ஆகியவற்றிற்கு புகழ் பெற்ற நகரமாகும். இங்கு உள்ள ரயில் நிலையத்தை தினந்தோறும் 6000 பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இது திருச்சி, மானாமதுரை, திருவாரூர் போன்ற ரயில் நிலையங்களில் இருந்து வரும் ரயில்களை கையாளும் முக்கிய சந்திப்பு ரயில் நிலையம் ஆகும். இங்கு தினந்தோறும் இயக்கப்படும் 22 ரயில்கள் மூலம் சராசரியாக ரூபாய் 1.8 லட்சம் வருமானம் ஈட்டப்படுகிறது.
வசதிகள் என்ன
மறுசீரமைப்பு பணிகளில் புதிய தோரண நுழைவுவாயில்கள், ரயில் நிலைய கட்டடத்தின் முன்பு விசாலமான மேற்கூரை, பாதசாரிகள் சென்று வர செட்டிநாடு பாணியில் முழுவதும் மூடப்பட்ட நடைபாதை, பயணிகள் மற்றும் வாகனங்கள் எளிதாக சென்று வரும் வகையில் வெளிவளாக மேம்பாடு, ரயில் நிலைய கட்டட முகப்பு நவீனம், பயன்பாட்டில் உள்ள நடை மேம்பால மேம்பாடு, 6 மீட்டர் அகலத்தில் புதிய நடை மேம்பாலம், ஆண்கள், பெண்கள், மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு தனித்தனியாக ஒப்பனை அறைகளுடன் கூடிய புதிய விசாலமான குளிரூட்ப்பட்ட காத்திருப்பு அறை, 5 நடைமேடைகளையும் இணைக்கும் வகையில் 3 மின் தூக்கிகள், நடைமேடையில் கூடுதல் இருக்கைகள், உள்ளூர் கலாச்சாரத்தை விளக்கும் வண்ண ஓவியங்கள், காத்திருப்பு பகுதி மேம்பாடு, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளான கைப்பிடி வசதியுடன் கூடிய சாய்வு தளப்பாதைகள், சிறப்பு கழிப்பறைகள் சிறப்பு பயண சீட்டு பதிவு சாளரங்கள், வாகன நிறுத்துமிடம், ஒவ்வொரு நடைமேடையிலும் சிறப்பு குடிநீர் குழாய்கள் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கால்வேல்யூம்' தகடுகளால் ஆன நடைமேடை
கண் கவர் 'கால்வேல்யூம்' தகடுகளால் ஆன நடைமேடை மேற்கூரைகள், முதல் நடைமேடை தரைதள மேம்பாடு, மின்னணு தகவல் பலகைகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பயன்பாட்டில் உள்ள ரயில் நிலைய கட்டத்தில் பயணச்சீட்டு பதிவு சாளரம், முகப்பு, கழிப்பறைகள் போன்றவை புனரமைக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட மின்சார விளக்கு வசதி, கழிவு நீர் கால்வாய்கள், பசுமை பூங்கா ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 440 சதுர மீட்டரில் மேற்கூரையுடன் கூடிய வாகன காப்பகம் மற்றும் 26 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 276 சதுர மீட்டரில் மேற்கூரையுடன் கூடிய வாகன காப்பகம் ஆகியவையும் புதியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
பயணிகளின் மகிழ்ச்சியான பயணத்தை உறுதி செய்கிறது
புதிய வெளிவளாகம் காத்திருப்பு பகுதி நடை மேம்பாலம் ஆகியவற்றின் மூலம் பயணிகள் தங்கு தடை இன்றி சென்றுவர முடியும். நவீன காத்திருப்பு அறைகள், கழிப்பறைகள், வசதியான இருக்கைகள் ஆகியவற்றின் மூலம் பயணிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறியுள்ளன. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரயில் நிலையப் பகுதிக்குள் எளிதாக சென்று வர முடியும். மேம்பட்ட கட்டமைப்பு மற்றும் மின்விளக்கு வசதி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. நவீன தகவல் பலகைகள் மேற்கூரைடன் கூடிய வாகன காப்பகங்கள் போன்றவை பயணிகளின் மகிழ்ச்சியான பயணத்தை உறுதி செய்கிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















