டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
சாலைகள் தரமானதாக போடப்பட்டு வடிகால்கள் பராமரிப்பில் உள்ளதால் அங்கும் தண்ணீர் தேங்கவில்லை. இருப்பினும் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் உத்தரவின்படி மாநகராட்சி பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நகர் பகுதியில் டிட்வா புயலால் பெய்த கனமழையில் எந்த ஒரு பகுதியிலும் தண்ணீர் தேங்கி நிற்கவில்லை. இதனால் மக்கள் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி பெய்து வருகிறது. இதன் தொடக்க காலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக இடைவிடாது கனமழை பெய்தது. பின்னர் மழை இல்லை. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் காட்டி வந்தனர். பல பகுதிகளில் நாற்று நடுதல், பாய்நாற்றங்கால், நாற்று விடும் பணிகள் என தொடர்ந்து நடந்து வந்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்தெடுத்தது. இதில் தஞ்சை மாவட்டத்திலும் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்தது. அதிகாலையில் ஆரம்பிக்கும் மழை விட்டு விட்டு இரவு வரை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் இடைவிடாது மழை தொடர்ந்து பெய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், சாலைகள் என்று எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. மரக்கிளைகள் உடைந்து பாதிப்பு என்று எவ்வித அசம்பாவிதமும் இல்லை. சாலைகள் தரமானதாகவும், வடிகால்களில் மண் இல்லாமலும் மாநகராட்சி நிர்வாகத்தினர் சிறப்பான பணிகளை மேற்கொண்டு இருந்ததால் மழைநீர் எப்பகுதியிலும் தேங்கி நிற்கவில்லை. ரயில்வே கீழ்பாலம் பகுதியில் சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி நிற்கும். ஆனால் தற்போது சாலைகள் தரமானதாக போடப்பட்டு வடிகால்கள் பராமரிப்பில் உள்ளதால் அங்கும் தண்ணீர் தேங்கவில்லை. இருப்பினும் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் உத்தரவின்படி மாநகராட்சி பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர். வடகிழக்கு பருவமழையை ஒட்டி 24 மணிநேரமும் எவ்வாறு தயார் நிலையில் இருந்தனரோ அதேபோல் தற்போதும் மக்களுக்கு சேவையாற்றும் வகையில் மாநகராட்சி நிர்வாகத்தினர் தயார் நிலையில் இருந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): அய்யம்பேட்டை 10, தஞ்சாவூா் 9, மஞ்சளாறு, மதுக்கூா், குருங்குளம் தலா 5, வல்லம், பாபநாசம், நெய்வாசல் தென்பாதி தலா 4, திருவிடைமருதூா், அணைக்கரை தலா 3, கும்பகோணம், திருவையாறு, பூதலூா், ஈச்சன்விடுதி, பேராவூரணி தலா 2, ஒரத்தநாடு 1.
மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வந்த நிலையில் திங்கள்கிழமை முற்பகலில் வெயிலும், பிற்பகலில் வானில் மேகமூட்டமும் பின்னரி; சிறிது நேரம் மழையும் பெய்தது. தஞ்சை மாநகரில் எப்பகுதியிலும் குடியிருப்பு வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காத நிலையே இருந்தது. இதற்கு முக்கிய காரணம் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் என்பதில் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. சாலைகள் தரமாக அமைக்கப்பட்டுள்ளதால் மழைநீர் விரைவாக வழிந்தோடியது. மேலும் பாதாள சாக்கடை அமைப்புகளும் முழுமையாக கண்காணிக்கப்பட்டு, தூர்வாரப்பட்டு இருந்தது. இதனால் மழை நீர் வழிந்தோடுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. மேலும் கொசுமருந்து அடித்தல் உட்பட சுகாதாரப்பணிகளும் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த டிட்வா புயலால் பெய்த கனமழையால் மக்கள் பாதிக்கப்படாதவாறு அனைத்து பணிகளையும் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டு இருந்தனர். இதையடுத்து மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், வடகிழக்கு பருவமழையை ஒட்டி மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் ஊழியர்கள் பணியில் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் தற்போதைய டிட்வா புயலால் மக்கள் பாதிக்கப்படாதவாறு அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. மக்களின் பாதுகாப்பிற்காக நாங்கள் எப்போதும் துணை நிற்போம். எந்நேரமும் மக்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம். மக்களுக்கு சேவை செய்வதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் கொள்கை. அவரது வழியை பின்பற்றி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். மக்களுக்கு பேரிடர் காலங்களில் எவ்வித இடையூறும் இல்லாதவாறு பாதுகாப்பு உட்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





















