திரை பிரபலமாக இருப்பதால் மட்டுமே அரசியலில் வெல்ல முடியாது - பாலகிருஷ்ணன்
திரையுலகத்தில் பிரபலமாக இருக்கக்கூடிய ஒரே காரணத்தினால் அரசியலில் வெற்றி பெற முடியாது அது நடக்காது - சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு வரைவு அறிக்கை தொடர்பாக திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 12.02.25 அன்று திண்டுக்கல், மதுரை மாநகர், புறநகர், தேனி, சிவகங்கை மற்றும் விருதுநகர் என ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னணி ஊழியர்கள் பங்கேற்பு சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு ஆளுநர் செயல்பாடு சம்பந்தமாகவும் அதே மாதிரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12க்கும் மேற்பட்ட மசோதாக்களை கேள்வி இல்லாமல் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தாம தப்படுத்தியது தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்திம் நீண்ட விசாரணை நடத்தி முடிந்து இருக்கிறது எனவும்,

அந்த விசாரணையில் உச்ச நீதிமன்றம் எழுப்பி உள்ள பல கேள்விகளுக்கு ஆளுநரும், ஒன்றிய அரசும் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்று இருக்கின்ற காட்சியை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது என கூறினார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எந்தவிதமான காரணமும் தெரிவிக்காமல் தாமதப்படுத்தியிருப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்காக தமிழ்நாட்டு மக்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது எனவும், தமிழ்நாட்டின் உரிமையை ஆளுநர் தட்டி பறித்திருக்கிறார். இப்பேற்பட்ட ஆளுநர் தொடர்ந்து தமிழ்நாட்டில் பயணிப்பது என்பது வன்மையாக கண்டனத்துக்குரியது எனக்கூறினார்.
உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசு ஏன் ஆளுநர் ரவியை திரும்பப் பெற மறுக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார். உடனடியாக ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை எதிர்க்கட்சிகள் சொல்லி இருக்கக்கூடிய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அதற்கு நியாயமான பதில் சொன்ன மாதிரி தெரியவில்லை எனவும்,
ஏழை, எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களுக்கும் மிகக் கொடூரமான வரி விதிப்பை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி இல்லாத பொருட்களே கிடையாது. கல்வி நிறுவனங்களே செயல்பட முடியாத அளவிற்கு ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு போட்டுள்ளது எனவும், நாடு முழுவதும் உள்ள மக்களின் கோரிக்கை என்னவென்றால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செல்லும் வரி 4 சதவிகிதம் போட வேண்டும். அப்படி போட்டால் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை கட்டுப்படுத்த முடியும். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைதான் பட்ஜெட்டாக வந்துள்ளது கார்ப்பரேட்டுகளுக்கு மேலும் , மேலும் சலுகைகள் அனுபவிக்கவும், மாநில உரிமை மக்களுடைய உரிமை தட்டிப் பறித்து ஒடுக்கு முறைக்கு ஆளாக்க கூடிய அளவிற்கு தான் நிதிநிலை அறிக்கை உள்ளது.

தமிழகத்தில் பஞ்சமி நிலத்தை விலைக்கு வாங்கி தனது பெயருக்கு அதிமுக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முறைகேடாக பட்டா வாங்கியுள்ளார். இது தொடர்பாக எஸ்சி எஸ்டி ஆணையத்தில் விசாரணைக்கு வந்து அந்தப் பட்டாவை ரத்து செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு முன்னாள் முதலமைச்சர் எப்படி வாங்கலாம் இதில் என்ன நியாயம் உள்ளது. எப்படி அவருக்கு பட்டா மாற்றப்பட்டது. அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற போக்கு என்பது வன்மையாக கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வமோ இதுவரை வாய் திறந்து பதிலே சொல்ல மாட்டேன் என்கின்றார். தமிழக அரசு பஞ்சமி நிலத்தை முறையிட வாங்கியவர்களிடமிருந்து நிலங்களை கைப்பற்றி பட்டாக்களை ரத்து செய்து பஞ்சமி மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
குறிப்பாக தமிழ்நாட்டில் தினம் தோறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் 244 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களே இவ்வளவு மோசமாக நடந்து கொண்டால் சமூகம் எங்கே இருக்கிறது என்பதை கவலை அளிக்க கூடியதாக உள்ளது. பாலியல் தொடர்பான பிரச்சனைகளை விவாதிப்பதற்கும் தடுப்பதற்கும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் கூறினார். இது சமூகப் பிரச்சனையாக உள்ளது. தமிழ்நாடு அரசு இதனை தடுப்பதற்கு கடுமையான சட்டதிட்டங்களை கொண்டு வந்துள்ளனர். இருந்தாலும் சட்டமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மத்திய அமைச்சர்கள் ஏழு மாநில முதலமைச்சர்கள் ஆகியோர் வீதி வீதியாக சென்று பாஜகவிற்கு வாக்குகள் சேகரித்துள்ளனர். அந்நிய நாட்டின் மீது படையெடுப்பது போல மோடி அரசாங்கம் படையெடுத்து தான் வெற்றி பெற்றுள்ளது. அதிகார துஷ்பிரயோகம் செய்தும் கூட இரண்டு சதவீதம் மட்டுமே ஓட்டு வித்தியாசம் உள்ளது. காங்கிரசும் ஆம் ஆத்மி கட்சியும் இணக்கமாக இருந்திருந்தால் இரண்டு சதவீதம் வாக்கு வித்தியாசத்தை சரி செய்து வெற்றி பெற்று பிஜேபியை வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கலாம். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசை ஆட்சியை விட்டு அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என கூறியதோடு சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டார். இந்நிலையில் பாலியல் புகார் தொடர்பாக நேற்று பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தற்பொழுது அண்ணாமலை தன்னை எதுவால் அடித்துக் கொள்வார் என கேள்வி எழுப்பினார்.

மேலும் தமிழகத்தில் பாலியல் விவகாரத்தில் அரசியல் கட்சி ரீதியாக அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பாஜக நிர்வாகிகள் தான். அண்ணாமலை காவடி தூக்கிக் கொண்டு செல்ல வேண்டியது தான். தமிழ்நாட்டில் 99% மக்கள் இறை நம்பிக்கை உள்ளவர்கள் தான் 99 சதவீத மக்களும் பாஜகவிற்கு எதிரியாக தான் உள்ளனர்.
இறை நம்பிக்கை என்பது வேறு பாஜகவின் மதவெறி அரசியல் என்பது வேறு மக்கள் கூட்டம் பாஜகவிற்கு அதிகமாக உள்ளது என்றால் ஏன் இடைத்தேர்தலில் நீங்கள் போட்டியிடவில்லை எனவும் கேள்வி எழுப்பினார். திமுக அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் முடிவடைந்து நான்காம் ஆண்டில் அடித்து வைத்துள்ளார்கள், இந்நிலையில், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கோரிக்கைகளை தாமதம் இன்றி சம்பந்தப்பட்ட ஊழியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தையின் நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடக்கூடிய ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு நாங்கள் எப்பொழுதும் பக்கபலமாக இருப்போம். திருப்பரங்குன்றத்தில் பாஜக, ஆர் எஸ் எஸ், இந்து முன்னணி போன்ற இந்து அமைப்புகள் தேவையில்லாத ஒரு பதற்றத்தை உருவாக்கி உள்ளனர். அமைதியாக இருக்கின்ற திருப்பரங்குன்றத்தை கலவரப் பிரதேசமாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.
அவதூறு பிரச்சாரத்தை பொய் பிரச்சாரத்தை செய்பவர்கள் மதப் பதட்டத்தை மோதலை உருவாக்குபவர்கள் மீது காவல்துறை மற்றும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக உள்ளனர். அதிமுக பொருத்தவரை ஓபிஎஸ் ஒரு பக்கம் இபிஎஸ் ஒரு பக்கமும் உள்ளனர். எதிர்க்கட்சிகள் பிரிந்துள்ள போது இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது என்பது பிரகாசமாக உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதிமுகவை பொருத்தவரை எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைமை அதிமுகவில் இல்லை. ஏற்கனவே பல கூறுகளாக பிரிந்து உள்ளது. இபிஸிற்கும் செங்கோட்டையனுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இன்னும் பல பேர் முரண்பாடு காரணமாக வெளியே வரலாம் எனவும் கூறினார்.

அதிமுக பொறுத்தவரை அரசியல் நிலைபாடு நிலையற்ற நிலைப்பாடை எடுக்கின்றனர். முன்பு பிஜேபியுடன் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் பிஜேபிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எதிராக நிலைப்பாடு எடுக்கின்றனர். ஆனால், தற்பொழுது டெல்லி வெற்றியை கொண்டாடுகின்றனர். எதை எப்பொழுது எப்படி பேசுவார் என யாருக்கும் தெரியவில்லை. இவரை நம்பி எப்படி இவர் பின்னால் செல்வார்கள். அதன் வெளிப்பாடு தான் பலர் அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். விஜய் தற்பொழுது தான் கட்சி ஆரம்பித்து உள்ளார். போகப் போகத்தான் அவரோடு செயல்பாடு எப்படி இருக்கும் என தெரிய வரும் பொதுவாக திரையுலகத்தில் பிரபலமாக இருக்கக்கூடிய ஒரே காரணத்தினால் அரசியலில் வெற்றி பெற முடியும் என்று சொன்னால் அது நடக்காது. தமிழ்நாட்டு மக்கள் அந்த அளவிற்கு விழிப்புணர்வு இல்லாதவர்கள் இல்லை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் பொழுது அரசியல் விழிப்புணர்வு அதிகம் உள்ள மக்கள் தமிழக மக்கள் எனக் கூறினார்.





















