குரங்கணி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத் தீ
தேனி மாவட்டம் போடி , குரங்கனி மலைப்பகுதிகளிலும் , திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பரவியதால் அறிய வகை மரங்கள் தீ எரிந்து சேதம்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் நேற்று அதிகாலை காட்டுத்தீ பற்றி எரிந்தது. இந்த தீ புலியூத்து வனப்பகுதியில் இருந்து ஹெவிகுண்டு என்னும் மலைப்பகுதியில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பற்றி எரிந்தது. இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
Prahlad Modi: பிரதமர் மோடியின் இளைய சகோதரர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..
மேலும் வனத்துறையினரும் தீ அணைப்பு பணிக்கு வந்தனர். பின்னர் தீயணைப்பு, வனத்துறையினர் இ்ணைந்து பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். போதிய உபகரணங்கள் இல்லாததால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 7 மணி நேரம் போராடி தண்ணீரை அடித்து தீயை அணைத்தனர். ஆனால் பற்றி எரிந்த காட்டுத்தீயால் வனப்பகுதியில் இருந்த அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சேதமாகின. இந்த பகுதியில் தொடர்ந்து காட்டுத்தீ பற்றி எரிவதால் வனவிலங்குகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே காட்டுத் தீ ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக மலைப்பகுதியில் உள்ள செடி, கொடிகள், புல்வெளி பகுதிகள் காய்ந்தும், கருகியும் வருகின்றன. அவ்வாறு காய்ந்துபோன செடி, கொடிகள் மற்றும் மரங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே வனப்பகுதி மற்றும் தனியார் தரிசு நிலங்கள், வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களில் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்தது. இருப்பினும் வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு, தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
இந்தநிலையில் கொடைக்கானல் அருகே பழனி மலைப்பாதையில் பி.எல்.செட் அருகே மலைப்பகுதியில் வருவாய்த்துறைக்கு ெசாந்தமான நிலம் மற்றும் தனியார் தோட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு தீப்பிடித்தது. கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீ, அடுத்தடுத்து உள்ள பகுதிகளிலும் வேகமாக பரவி பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இரவு நேரத்தில் தீப்பற்றி எரிந்த பகுதி முழுவதும் செந்நிறத்தில் காட்சியளித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ நேற்று இரவு வரை கட்டுக்குள் வரவில்லை. இருப்பினும் தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கொடைக்கானல் அருகே புலியூர், வில்பட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் உள்ள மலைப்பகுதியிலும் நேற்று முதல் தீப்பிடித்து எரிந்து வருகிறது.