பஞ்சாப்பில் உயிரிழந்த ராணுவ வீரர்; சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டுவரப்படும் உடல்
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டுவரப்படவுள்ளது.
தேனி மாவட்டம், தேவாரம், தே. மூணாண்டிபட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி ரத்தினம். இவர்களின் மகன் யோகேஷ்குமார்(21), இவர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, இந்திய ராணுவத்தில் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு சேர்ந்துள்ளார். தற்போது ராணுவ பயிற்சிகளை முடித்துவிட்டு, இந்திய ராணுவத்தில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா ராணுவ முகாமில் பணியாற்றி வருகிறார். யோகேஷ்குமார் குடும்பத்தில், இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர் ஒரே பையன் என்பதால், சிறுவயதில் இருந்தே செல்லமாக வளர்ந்துள்ளார். பத்தாம் வகுப்பு முடித்ததில் இருந்தே, இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் நண்பர்களுடன் சேர்ந்து உள்ளூரில் பயிற்சி எடுத்து வந்தார்.
கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்துள்ளார். குடும்பத்தினருடன் அடிக்கடி போனில் பேசுவதை யோகேஷ்குமார் வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் நேற்று யோகேஷ்குமார், குடும்பத்தினர்க்கு ராணுவ முகாமில் இருந்து வந்த போனில் அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி துடித்துள்ளனர். தகவல் உறவினர்களுக்கு பரவவே, தேவாரம் ஊரே சோகமானது. இந்த நிலையில், இறந்த யோகேஷ்குமார், உடல் இன்று சொந்த ஊரான, தேவாரம் மூணாண்டிபட்டிக்கு கொண்டு வரப்பட உள்ளது. அங்கு முழு ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விவசாய கூலி தொழிலாளியான ஜெயராஜ், தனது ஒரே மகனை இழந்ததாக கூறி கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அரசு சார்பில் மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்த நிலையில் ராணுவத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரிக்கும், விசாரணை குழுவுக்குத் தலைமை தாங்கும் பதிண்டா காவல் கண்காணிப்பாளர் அஜய் காந்தி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “வெள்ளை குர்தா-பைஜாமா அணிந்திருந்த அடையாளம் தெரியாத இருவர், முகம் மற்றும் தலையை மூடிய நிலையில், துப்பாக்கிச் சூடு முடிந்து படைமுகாமில் இருந்து வெளியே வருவதை ஒரு ஜவான் பார்த்துள்ளார். அவர்களில் ஒருவர் INSAS துப்பாக்கியையும், மற்றொன்று கோடரியையும் ஏந்தியிருந்ததாக என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.
நடுத்தர உயரம் கொண்டதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல் நடத்திய இருவர் ராணுவ வீரரை கண்டதும் படைமுகாமிற்கு அருகில் உள்ள வனப்பகுதியை நோக்கி தப்பி ஓடினர். பின்னர் அவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போனதாகக் கூறப்படும் 28 ரவுண்டுகள் தோட்டாக்கள் மற்றும் INSAS துப்பாக்கியின் தொடர்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கண்டறியப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்