அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
2026 Assembly Elections: தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 170 இடங்களில் போட்டியிட விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜகவுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கவும் சம்மதித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அமமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்க்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல்
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் அடுத்ததாக ஆட்சியமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. தொடர்ந்து 2 முறை தேர்தலில் வெற்றி பெற்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி எழுத திமுக தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதேசமயம் கடந்த முறை எதிர்கட்சியாக மாறிய அதிமுக இம்முறை ஆட்சிக்கட்டிலில் அமர முழு முயற்சி மேற்கொண்டுள்ளார்கள்.
திமுக கூட்டணியில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை உள்ளது. அதேசமயம் அதிமுக கூட்டணியில் பாஜக மட்டும் உறுதி செய்துள்ளது. அமமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை தெரிவிக்கவில்லை. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முதல்முறையாக தமிழக வெற்றிக் கழகம் எதிர்கொள்கிறது. மேலும் வழக்கம்போல நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளதால் நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி
இப்படியான நிலையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் பொருட்டும், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று முக்கிய நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு கலந்து கொண்டது. பாஜக தரப்பில் முக்கிய தமிழக பிரமுகர்களும், அதிமுக தரப்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து வியூகம் வகுக்கப்பட்டது. அதேசமயம் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமமுக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியதாகவும், அதற்கு அவர் நிபந்தனைகளுடன் கூடிய சம்மதத்தை வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
கூட்டணி பங்கீடு?
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 170 இடங்களில் போட்டியிட விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜகவுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கவும் சம்மதித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாமக இணைந்தால் அவர்களுக்கு 21 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 6 தொகுதிகளும், அமமுகவுக்கு 6 தொகுதிகளும், ஓபிஎஸ் தரப்புக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தேசிய கூட்டணியில் பாமகவை சேர்க்கும் பொறுப்பை அதிமுக ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் வலுவான கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி வாகை சூடலாம் என நம்பிக்கை அதிமுக, பாஜக இடையே இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





















