அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
முதல்வர் அரசு ஊழியர்களைக் கைவிட மாட்டார். நாம் கொடுக்கும் 1 ரூபாயில் மத்திய அரசு, நமக்கு 29 பைசாவைத் திருப்பித் தருகிறது. பிஹார் மாநிலத்துக்கு ஏழே முக்கால் ரூபாய் தருகிறது- அமைச்சர் அன்பில் மகேஸ்.

இன்று முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை உள்ள இடைப்பட்ட காலத்தில், நல்ல செய்தி வரும். முதல்வர் அரசு ஊழியர்களைக் கைவிட மாட்டார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி அளித்துள்ளார்.
நிறைவேற்றப்படாத திமுக வாக்குறுதிகள்
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றன. முன்னதாக திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. எனினும் அவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இதற்கிடையே, ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக 2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாக வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தோல்வியடைந்த பேச்சுவார்த்தை
இதைத் தொடர்ந்து தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் நேற்று (டிசம்பர் 22) ஆசிரியர் சங்கங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அரசு ஊரியர்களின் கோரிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. எனினும் இதுகுறித்து எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.
இதை அடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பு, ஜனவரி 6 முதல் காலவரையறை இல்லாத போராட்டம் தொடங்கும் என்று எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’நேற்று பிற்பகல் 2.30 மணி வரை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறும்போது, ’3 முறை நேரில் சந்தித்துப் பேசினோம். அரசின் நிலைப்பாடு என்ன என்று தெரிந்து கொள்ளவே வந்திருக்கிறோம். இது ஒரு முறையான பேச்சுவார்த்தை அல்ல’ என்று ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் அரசு ஊழியர்களைக் கைவிட மாட்டார்
எனினும் பிறகு செய்தித் தாள்களில், பேச்சுவார்த்தை தோல்வி, ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையறை இல்லாத போராட்டம் நடத்தப்படும் என்று வந்திருந்தது. இன்று முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை உள்ள இடைப்பட்ட காலத்தில், நல்ல செய்தி வரும். முதல்வர் அரசு ஊழியர்களைக் கைவிட மாட்டார். நாம் கொடுக்கும் 1 ரூபாயில் மத்திய அரசு, நமக்கு 29 பைசாவைத் திருப்பித் தருகிறது. பிஹார் மாநிலத்துக்கு ஏழே முக்கால் ரூபாய் தருகிறது.
எது எப்படி இருந்தாலும், முதல்வர் அரசு ஊழியர்களைக் கைவிட மாட்டார். ஜனவரி 6ஆம் தேதிக்குள் கட்டாயம் நல்ல செய்தி வரும்’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.






















