Tamil NewYear Wishes: மகிழ்ச்சியும், இன்பமும் பெருகவேண்டும்.. அரசியல் கட்சிகளின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
நாளை தமிழ் வருட பிறப்பை ஒட்டி பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நாளை ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஆங்கில புத்தானடு ஜனவரி 1ஆம் தேதி கொண்டாடப்பட்டாலும் தமிழ் மாதம் சித்திரை 1 ஆம் தேதி தமிழ் புத்தாண்டாக அனுசரிக்கப்படுகிறது. நாளை மக்கள் அனைவரும் காலை சித்திரை கனி வைத்து வழிபடுவார்கள். சித்திரை கனி என்பது பணம், நகை, பழங்கள், கண்ணாடி வைத்து வழிபடுவார்கள். அப்படி வழிபட்டால் அந்த ஆண்டு செல்வ செழிப்புடன் எந்த குறைபாடும் இல்லாமல் இருக்கும் என்பது நம்பிக்கை.
தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சித்திரை பிறக்கட்டும், சமூகநீதி மலரட்டும் என குறிப்பிட்டு, ” வசந்தங்களை வாழ்க்கையில் நிறைக்க வரும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
சித்திரை மாதம் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் மாதம் ஆகும். காரணம் சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும். அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும் என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை முழுநிலவு நாளில் தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவர். சித்திரை மாதத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். எனவே தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி மகிழும் போதிலும், சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரைத் திருநாள் தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத நாளாகும்.
சித்திரைத் திருநாள் என்றாலே மக்கள் பொது இடங்களில் கூடி மகிழ்வதும், கொண்டாடுவதும் தான். அதிலும் குறிப்பாக சித்திரை முழுநிலவு நாம் நமக்கு மகிழ்ச்சியை மட்டுமே வழங்கும்; நமது வெற்றியை மட்டுமே பறைசாற்றும். கடந்த ஆண்டின் சித்திரை நாளுக்கு முன்பாகத்தான் நமக்கு சமூகநீதி கிடைப்பதற்கு தடையாக இருந்த அனைத்தும் நீதித்துறையின் சுத்தியலால் தகர்த்து எறியப்பட்டன. இந்த ஆண்டின் சித்திரையில் நமக்கு இனிப்பான செய்தி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அது தாமதமாகியுள்ளது.
நமக்கான சமூகநீதியை வென்றெடுக்கும் வழிமுறைகள் நமக்குத் தெரியும். சித்திரையில் வசந்தம் வரும்; மகிழ்ச்சி வரும்; கொண்டாட்டங்கள் வரும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு சமூகநீதி மலரும் என்பதும் உண்மை தான். அந்தப் பொறுப்பை என்னிடம் விட்டு சித்திரைத் திருநாளை கொண்டாடி மகிழுங்கள். வெகுவிரைவில் சமூகநீதியைக் கொண்டாடுவதற்கும் அணியமாக இருங்கள்.
அதையும் கடந்து தமிழ் மக்களுக்கு அனைத்து வகையான நலங்களும், வளங்களும் கிடைக்க வேண்டும்; அனைத்து மக்களின் வாழ்விலும் நெருக்கடிகள் மறைந்து மகிழ்ச்சி நிறைய வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க இச்சித்திரைத் திருநாளில் தமிழர்களாகிய நாம் உறுதியேற்றுக் கொள்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், மக்களுக்கு நலம் வளத்தை வழங்கட்டும் சித்திரை திருநாள் என குறிப்பிட்டு, “தமிழர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது. அந்த வகையில் சித்திரைத் திருநாள் நமக்கு வசந்தத்தை மட்டுமின்றி, வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவாகும்.
தை மாதத்திற்கான அனைத்து சிறப்புகளும் சித்திரை மாதத்திற்கும் உண்டு. தமிழர்களின் வாழ்வில் பல நன்மைகளின் தொடக்கமாக சித்திரை மாதம் திகழ்கிறது. சித்திரையில் தொடங்கப்படும் பணிகள் வெற்றிகரமாக அமையும் என்பதே நம்பிக்கை. அதற்கேற்ற வகையில் தமிழர்களின் வாழ்க்கையில் அமைதி, மனநிறைவு, வளம், வெற்றி, மகிழ்ச்சி ஆகியவை பொங்கட்டும் என்று உளமாற வாழ்த்துகிறேன்” என வாழ்த்தியுள்ளார்.
தமிழ் புத்தாண்டை ஒட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ் புத்தாண்டு மலருகின்ற இந்த நன்னாளில், அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்லாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடிய மக்கள், அந்த நாள் வேறு ஒரு நாளுக்கு மாற்றப்பட்டபோது மனமுடைந்த நிலையில், உலகத் தமிழர்களின் ஒருமித்த உணர்வின்படியும், உளப்பூர்வ விருப்பத்தின்படியும், சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு திருநாள் என்பதை இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மீண்டும் உறுதி செய்ததை, இந்த இனிய நன்நாளில் பெருமையோடு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
புதிய சாதனைகளைப் படைத்து, புதிய வெற்றிகளைப் பெற்று, வழிமறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வளமான தமிழகத்தைப் படைத்திடுவோம் என இப்புத்தாண்டில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
மலர இருக்கும் 'சோபகிருது' ஆண்டில், தமிழர்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் பெருக வேண்டும்; எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; தமிழர் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று மனதார வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், எனது உளமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். நல்லதே நடக்க, நானிலம் சிறக்க, மகிழ்ச்சி பொங்க, மனிதநேயம் சிறக்க, வரவேற்கிறது. தமிழ் புத்தாண்டு; வாழ்வோம் பல்லாண்டு!” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.