மேலும் அறிய
வரதட்சணை கொடுமை: பெண்கள் மீதான வன்முறை இன்னும் தொடர்கிறது.. அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் & தீர்வுகள் !
வரதட்சணை கொடுமையால், பெண்களின் மனநல பாதிப்புகள் பெரிதும் கவனிக்கப்படாத ஒரு பக்கமாகவே இருக்கின்றன. - மனநல ஆலோசகர் தெரிவிப்பது என்ன முழுவிவரம்.

வரதட்சணை
Source : whats app
வரதட்சணை ஒரு தனிப்பட்ட குடும்ப பிரச்னை அல்ல, இது ஒரு பெரிய சமூகப் பிணி. இதைத் தீர்க்க, விழிப்புணர்வு அவசியம்.
வரதட்சணை கொடுமை
திருமணத்திற்குப் பின்னர் பெண்கள் அனுபவிக்கும் வரதட்சணை கொடுமை, காலம் கடந்தாலும் இன்னும் அழியாத அவலமாக தொடர்கிறது. இதன் உதாரணமாய் சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற சம்பவம் மிரளவைத்தது. இந்நிலையில் வரதட்சணை கொடுமைகள் குறித்து மனநல ஆலோசகர் மற்றும் உளசிகிச்சையாளர் ப.ராஜ சௌந்தர பாண்டியன் நம்மிடம் பேசினார்..,” வரதட்சணை என்பது கொடுமையான வன்முறையின் மௌன முகம். திருமணம் என்பது மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் வரதட்சணை காரணமாக தாக்கப்படுவதோ, கொல்லப்படுவதோ, தற்கொலை செய்யவோ நேரிடுகிறது. இதில் மனநல பாதிப்புகள் பெரிதும் கவனிக்கப்படாத ஒரு பக்கமாகவே இருக்கின்றன.
தொடரும் வரதட்சணை
இந்திய அளவில் வரதட்சணை தொடர்பான சோகமான தரவுகள் 2021ஆம் ஆண்டில், இந்திய முழுவதும் 13,568 வழக்குகள் வரதட்சணைத் தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டன. அதே ஆண்டில் 6,753 பெண்கள் வரதட்சணை தொடர்பாக உயிரிழந்தனர். 2022ஆம் ஆண்டிலும் நிலைமையில் மாற்றமில்லை. 13,479 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; அதே ஆண்டில் 6,450 மரணங்கள் இந்த ஒரே காரணத்தால் ஏற்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, தேசிய பெண்கள் ஆணையத்திற்கு வந்த மொத்த புகார்களில் 17% (4,383 புகார்கள்) வரதட்சணை தொடர்புடையவையே. வழக்கு உள்ளது, ஆனால் தீர்வு இல்லை. இவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது மிகக் குறைவாகவே உள்ளது. விசாரணைகள் ஆண்டுகள் தோறும் தள்ளிக்கொண்டே செல்லும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் நீண்ட கால நீதிக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகிறது. சான்றுகள் இல்லாததால் மட்டும் 359 வழக்குகள் மூடப்பட்டுள்ளன.
மனநலத்தில் ஏற்படும் தாக்கங்கள்
வரதட்சணை கேட்கப்படுவதோ, தரப்படுவதோ, அதற்காக அடிக்கப்படுவதோ என்பது பெண்களின் உடலையும், அதைவிட முக்கியமாக மனதையும் தீவிரமாக பாதிக்கிறது. தன்னை ஒரு சுமையாய் உணர்வது: "தன்னை வைத்து குடும்பமே மோசமாகிறது" என்ற குற்ற உணர்வில் பெண்கள் வீழ்கிறார்கள். மனச்சோர்வு, கவலை, பயம், தொடர்ந்து வரும் அழுத்தங்கள் மனநலத்தை சீர்குலைக்கும்.
தற்கொலை எண்ணங்கள்:
மனதளவில் தாங்க முடியாத அளவுக்கு அடங்கிக்கொள்ள முடியாத பெண்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். தனிமை மற்றும் மன ஒட்டாமை குடும்பத்திடம் உறவு சிதைந்து, சமுதாயத்திடம் பேசத் தயங்கும் நிலையில் மனவலிக்குள் மூழ்குகிறார்கள்.
தமிழ்நாட்டின் நிலைமை?
தமிழ்நாட்டிற்கான தெளிவான புள்ளிவிவரங்கள் தனியாக அறிவிக்கப்படாத போதும், தேசிய அளவில் இருக்கும் மோசமான தரவுகள் தமிழ்நாட்டிலும் பிரதிபலிக்கின்றன என்பது நிச்சயம். தமிழகத்திலும் வரதட்சணை குறித்து அடிக்கடி செய்திகள், சமூக ஊடக பதிவுகள் மற்றும் குடும்ப மன அழுத்தங்கள் வெளிப்படுகின்றன. சமூக வேலைத்திட்டங்கள் உள்ளபோதும், முழுமையான சட்ட நடைமுறைகளும், உணர்வுப்பூர்வமான ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன.
நாமென்ன செய்யலாம்?
வரதட்சணை ஒரு தனிப்பட்ட குடும்ப பிரச்னை அல்ல. இது ஒரு பெரிய சமூகப் பிணி. இதைத் தீர்க்க, விழிப்புணர்வு முக்கியம். பள்ளி, கல்லூரி, குடும்பங்கள் என எல்லா இடங்களிலும், இளம் தலைமுறைக்கு இது தொடர்பான அறிவுரை வழங்கப்பட வேண்டும். சட்ட உதவி மற்றும் மனநல ஆலோசனை பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். ஊடகங்களில் வன்முறையின் உண்மை முகத்தை காட்டும் நிகழ்ச்சிகள், செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பெண்கள் தனக்கு நேர்ந்ததை வெளிப்படையாகப் பகிரும்படியாக சமூகமும், நாமும் ஆதரிக்க வேண்டும். வரதட்சணை என்பது சின்ன தவறு அல்ல. இது ஒவ்வொரு நாளும் ஒரு பெண்ணின் சிரிப்பை, மனதையும், சில சமயங்களில் உயிரையும் பறிக்கக்கூடிய கொடுமையான வன்முறை. இந்த வன்முறைகளும் மரணங்களும் நடந்து கொண்டிருக்கின்றன, நாமும் பார்த்துக்கொண்டே இருக்கிறோம் என்று விட்டுவிடக்கூடாது. இது ஒரு சாதாரண நிகழ்வு போல எடுத்துக்கொண்டு இயல்பாகவே நடந்துகொண்டே இருக்கட்டும் என்ற மனநிலையை மாற்ற வேண்டும். இது ஒரு சமூகப் பாவம். இதனை எதிர்த்து நம் மனசாட்சியும், செயல்களும் எழ வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















