மேலும் அறிய
Advertisement
மதுரையின் சுவிட்சர்லாந்து அரிட்டாபட்டி; அட நம்ம KPY ராமர் ஊரா இது!
மதுரைக் காரங்க என்றாலே காலையில எந்திருச்சு பெட்ரோலில் வாய் கொப்பளிச்சு, அரிவாளில் சேவிங் செய்வாங்க என்று அதிபயங்கரமா திரைப்படத்தில் சித்தரிக்கும் இயக்குநர்கள் அரிட்டாபட்டி போன்ற அழகான, அமைதியான கிராமங்களையும் காட்சிப்படுத்த வேண்டும்.
போவோமா ஊர்கோலம் ....
அரிட்டாபட்டியில் எங்கெங்கும்...
சித்திரை மாத கத்திரி வெயிலில் கூட ஜில்லுனு ஒரு ஊரு தான் அரிட்டாபட்டி. பெருமாள் நாமத்தோட ஆரம்பிக்கும் பெயர் என்பதாலோ என்னவோ ஆன்மீக பூமியா இருக்கு. சமணத்துறவி அரிட்ட காயிபன் பெயரால் இந்த ஊர் அமைந்தாகவும் சொல்பவர்கள் உண்டு இயற்கைக்கு, ஆன்மீகத்திற்கு பெஸ்ட் பிலேஸ் அரிட்டாபட்டி தான். அறியப்படாத மதுரைல லிஸ்ட் எடுத்தா அரிட்டாபட்டிய கண்டிப்பா சேர்த்துக்கணும். அப்புடி ஒரு அருமையான ஊரு.
மதுரையில சுவிட்சர்லாந்துக்கு மாதிரி படம் வரையச் சொன்னா மதுரைக்காரங்க அரிட்டாபட்டிய வரைஞ்சு கொடுத்தாலும் ஆச்சரியம் இல்ல. கிராமத்த சுத்தி ஏழு மலை இருக்கு. அதனாலதான் என்னவோ இயற்கை எழில் கொஞ்சுது. அரிய வகை பறவைகள் நடமாட்டம் இருக்கும் கிராமம் தான் அரிட்டாபட்டி. அதனால சுற்றுச்சூழல் எந்த அளவுக்கு தூய்மையா இருக்குனு கணிக்க முடியும். ஊர சுத்தி விவசாயம். வாழை, கரும்பு, கத்திரி, வெண்டி, கருனைனு பலதரப்பட்ட விவசாயம் நடக்குது. மலை உச்சில இருந்து பார்த்தா கோழி கொண்ட பூவு கலர் கண்ண பறிக்கும். பச்ச பசேல்னு தெரியுற பச்ச நெல்லு தோகை நெஞ்சையும் குளு, குளுக்க வைக்கும். வடக்குப்புறமா, அழகர்கோயில் சாலை வழியா வந்தா சின்னையன் கோயில் மண் குதிரை கிராமத்து பாரம்பரியத்த சொல்லும். "பொட்டல காத்தவரு சின்னையன், பொடவ காத்தவரு பெரியையன்" சொலவடையோட சாமிய வேண்டிக்குவாங்க.
காலார நடக்கும் போது ரோட்டோர தென்னமர நிழல்ல நிண்டுதே போவோம். எதிர்க்க ஆடு, மாடுகள பத்தியாரும் ஆயாக்களும், தாத்தாக்களும் கம்பு கட்டி கொண்டாரும் தூக்குப்போணி ஆடுறதே அழகு தான். ஊரு மந்தைல பீடி பத்தவைக்கும் பெருசுக பேசும் கதை ஆயிரம். குட்டி, குட்டி டீ கடையில கூட டீ தண்ணி அருமையா இருக்கும். கூடுதலா தண்ணி கலந்த டீயினாலும் சுருக்குனு இருக்கும். அங்கையே இட்லி, வடையும் கிடைக்கும். தவக்குற பிள்ளைக்கு துண்ட கட்டி நடை பழகிவிடும் தாத்தாக்கள் பாசத்த காண முடியும். கிள்ளி போட்ட வெற்றிலையில, டச்சு ஸ்கிரீன தேய்கிறது மாதிரி சுண்ணாம்ப தேய்க்குற பாட்டிக கை காச்சு போயிருக்கும். விடிய காலையில பருத்திப்பாலும், பணியாரமும் கேட்டு அழுகுற பிள்ளைகள பார்க்க முடியும்.
ஆடிக்காருக்குக் கூட இத்தனதடவ கிளினிங் ஆயில் போட மாட்டாங்க. நம்ம ஊரு அண்ணெங்க சைக்கிளுக்கு தேங்கா எண்ணெய் தேய்ச்சு கெத்து காட்டுறதே தனி தான். நீளமான ஏரியா, சந்து பொந்து எல்லாமே தெருவுல இருக்கும். மாடுபிடி வீரர்களையும், காவல்துறை பணியாளர்களையும் இன்ஜினியரிங் ஸ்டூடெண்டு மாதிரி எங்க தேடுனாலும் கிடைப்பாங்க. அந்த அளவுக்கு இராணுவம், காவல்துறை பணிய நேசிச்சு போவாங்க. விஜய் டி.வி ராமருக்கு இது தான் ஊரு. ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு பிடிச்ச ஊரும் இதுதான்.
மொத்தத்துல ஊரும் ஊர் மக்களும் அழகு. வட்டெழுத்துகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், பாண்டியர் காலத்து குடைவரை கோயில், 11-ம் நூற்றாண்டு, 16-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள், திருமலை நாயக்கர் காலத்து செப்பேடு, மடை கல்வெட்டுகள், மகாவீரர் சிற்பம், சமணர் படுக்கை என பல தொல்லியல் விசயங்களையும் காணமுடியும். வெயில் காலத்திலும் குறையாம தண்ணி கொடுக்கும் குளம் தான் அரிட்டாபட்டி தர்மகுளம். இந்த குளத்தில் திருமணமான தம்பதிகள், கல்யாணம் நடந்த மறுநாள் தண்ணீர் எடுத்து சமைத்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என்று நம்பிக்கையும் இருக்கு.
இந்த குளத்தை பற்றி அரிட்டாபட்டி திருவிழாவில் பெருமையா பாடுவாங்க. "வள்ளாலபட்டி வளவுக்கு ஒரு மந்தை , தெற்கு தெரு தெருவிற்கு ஒரு மந்தை , அரிட்டாபட்டிக்கு அழகான தர்மர்குளம்" என்று தங்கள் தவிப்பை போக்கும் குளத்தை கும்மியடித்து பாடுவாங்க. இயக்குநர் வசந்த பாலன் அரிட்டாபட்டியோட பின் அழக அரவான் படத்துல அழகா காட்டி இருப்பார். படத்தில் வரும் பாறைப்புடவுகள் அனைத்தும் அரிட்டாபட்டி தான். அரிட்டாபட்டி மலை முழுதும் நூற்றுக்கணக்கான சுனைகள் இருக்கு. இதனால தான் பறவைகளும், மான், முயல் என்று சின்ன விலங்களும் இங்க வசிக்குது.
ரேப்ட்டார்ஸ் என்று அழைக்கப்படும் பெரியவகை பறவைகள் அதிகமா இருக்கு. தென்னிந்தியாவில் எங்கும் இல்லாத அரிதா காணப்படும் பல பறவைகளும் உள்ளன. அதில் முக்கியமாக (லகார் ஃபால்கன்) லகுடு என்று அழைக்ககூடிய பறவை உள்ளது. இது மணிக்கு 250.கிமீ வேகத்தில் செல்லக்கூடிய திறன்படைத்தது. இதன் வேட்டையாடும் ஸ்டைலே, தனி தான். பறக்கும் போதே வேட்டையாடி சாப்பிடும்.
அதே போல சகின் ஃபால்கன் என்ற பறவை மணிக்கு 380 கி.மீ மேல் வேகத்தில் செல்லக்கூடியது. உலக அளவில் வேகமாக பறக்கும் வகை பறவையில் இதுவும் ஒன்று. இது தன் உணவை ஸ்பூப் முறையில் தேடும். துப்பாக்கி குண்டுகளைப் போல் சீறிப்பாயும் . இதன் மூக்குப் பகுதியில் காற்றை கட்டுபடுத்தக்கூடிய அமைப்பு உள்ளது எனவே அதிக வேகத்தில் செல்கின்றது அப்படி போனாலும் அதற்கு நுரையீரல் சீரகா இருக்கும்.
போனாலிஸ் ( ராஜாலிக் கழுகு ) என்று அழைக்கபடும் மிகவும் கம்பீரமாக இருக்கும் பறவை. ஆண்டிற்கு அதிக பட்சம் ஒரு முட்டை தான் பொரிக்கும் . சூழ் நிலையை கண்காணிப்பதில் நேர்த்தியுடையது. கூடு கட்ட கொண்டுவரும் குட்சிகளை நன்கு தேர்வு செய்து எடுத்து மிகவும் பாதுகாப்பாக கொண்டுவரும். 'பக்கிப்பறவை' அதிகமா ஆசைப்படுபவன ஏன்டா பக்கியாட்டம் அழைகிறாய் என்று திட்டுவார்கள்.
அதைப் போலதா இதன் செயலும் இருக்கும். நைட் ஜார் என்று அழைக்கபடும் இது பகல் முழுவதும் படுத்துக்கிடந்து இரவில் தனது வேட்டைக்கு கிளம்பும் . பக்கிப் பறைவகள் மரத்தில் அமருவது மிகவும் தெளிவாக அமைந்து தனது எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ளும். சிவப்புக் கழுத்து ஃபால்கன் , கேஸ்ட்ரால் , பூட்டட் ஈகிள், பிரவுன் பிஸ் ஈகில் , சார்டட் நெக் ஈகிள் , தேன் பருந்து , வெள்ளைக்கண் பருந்து , இந்தியன் ஸ்பாட்டடு ஈகிள் , இந்தியன் ஈகிள் அவுள் , புலு ராக் திரஸ், பிராமினி கிட், பிளாக் கிட், சிக்கார், ஸ்பாட்டட் அவுள் போன்ற 80க்கும் மேற்பட்ட பறவைகள் அரிட்டாபட்டில இருக்கு. பலபறவைகள் இன்னும் முழுமையா அடையாளங் காணப்படாததும் ஆச்சரியம் தான்.
கிராம மக்கள் பலரும் தற்சார்பு வாழ்க்கைய தான் கடை பிடிக்கிறாங்க. பெரிய நோய்களுக்கும் கிராமத்தில் கிடைக்கும் மூலிகைய பறித்து மருந்து வச்சுக்குவாங்க. வயல் நண்டு, மீன் என்று ஊரைச் சுற்றி எல்லாம் கிடைப்பதால் அசைவத்துக்கும் பஞ்சம் இல்ல. வாழ்ந்தா இந்த ஊர்ல தாண்டா வாழனும் என்று ஊருக்கு வந்தவரை சொல்ல வைக்கும் கிராமம் தான் அரிட்டாபட்டி. மதுரைக்கு வந்தா கண்டிப்பா அரிட்டாபட்டிக்கு ஒரு விசிட் அடிங்க.
மதுரைக் காரங்க என்றாலே காலையில எந்திருச்சு பெட்ரோலில் வாய் கொப்பளிச்சு, அரிவாளில் சேவிங் செய்வாங்க என்று அதிபயங்கரமா திரைப்படத்தில் சித்தரிக்கும் இயக்குநர்கள் அரிட்டாபட்டி போன்ற அழகான, அமைதியான கிராமங்களையும் காட்சிப்படுத்த வேண்டும்.
இத மிஸ் பண்ணீராதீங்க பிளீஸ் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion