கூடுதலாக சுங்கக் கட்டணம் வசூல்; சாலையில் வாகனத்தை நிறுத்தி விவசாயிகள் மறியல் - பழனியில் பரபரப்பு
பழனியில் ஒரு வாகனத்திற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
பழனி நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட்டில் சுங்க கட்டணம் கூடுதலாக வசூலித்ததை கண்டித்து விவசாயிகள் சாலையில் வாகனத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகள் உள்ளது. இங்கு வேல் மருத்துவமனை பகுதியில் நகராட்சிக்கு உட்பட்ட தக்காளி மொத்த வியாபாரம் சந்தை செயல்பட்டு வருகிறது. பழனி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விவசாய நிலங்களில் விளைவிக்கக் கூடிய காய்கறிகளை இங்கு கொண்டு வந்து வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கம்.
இந்நிலையில், தக்காளி மார்க்கெட்டில் நுழைவு சுங்க கட்டணம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாகனத்திற்கு பத்து ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பழனி நகராட்சி சந்தையில் இன்று முதல் ஒரு வாகனத்திற்கு 50 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து சாலைகளில் வாகனத்தை நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கட்டணத்தை குறைத்து பழைய முறைப்படி கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது. பழனி அருகே உள்ள ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யபடும் சந்தையிலேயே ஒரு வாகனத்திற்கு 20 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில் பழனியில் ஒரு வாகனத்திற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.