(Source: ECI/ABP News/ABP Majha)
Shubman Gill: தொடர்ந்து சொதப்பல்.. சிக்கலில் கில்லின் டெஸ்ட் வாழ்க்கை.. இன்னைக்கு கண்டிப்பா பெர்பார்ம் பண்ணனுமே..
வெளிநாட்டு மண்ணில் கடந்த 9 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் அரைசதத்தை தவிர்த்து ஒருமுறை கூட கில் 30 ரன்களை கடக்கவில்லை.
இந்திய அணியின் பேட்ஸ்மேன் சுப்மன் கில்லில் டெஸ்ட் வாழ்க்கை இப்போதைக்கு ஆபத்தில் இருப்பதாக தெரிகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இதுவரை செய்த பேட்டிங், ரசிகர்களை கவரும்படியாக இல்லை.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தபடியாக இந்திய அணியை முன்னெடுத்து செல்லும் இளைஞர்களில் சுப்மன் கில் ஒருவர். கடந்த 2023ம் ஆண்டு சுப்மன் கில், ஒருநாள் போட்டிகள் மட்டுமின்றி, டி2- கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற அனுபவசாலிகளுடன் போட்டியிட்டு ரன்களை குவித்தார். ஆனால், டெஸ்டில் கில்லின் செயல்திறன் சொல்லும்படியாக எதுவும் இல்லை. இவ்வாறான நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுனில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி சுப்மன் கில் கேரியரில் மிக முக்கியமான போட்டியாக இருக்கும்.
புள்ளிவிவரங்கள்:
சுப்மன் கில்லின் டெஸ்ட் சராசரி 31 ஆக உள்ளது. 19 போட்டிகளில் விளையாடி 35 முறை பேட்டிங் செய்ய வந்து வெறும் 994 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்திய மண்ணில் சுப்மன் கில் இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் 14 இன்னிங்ஸ்களில் ஒரு சதம், 2 அரைசதத்துடன் 417 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியாவில் அவரது சராசரி 32.08 ஆகவும், வெளிநாட்டில் 30.37 ஆகவும் உள்ளது. இந்தியாவுக்கு வெளியே இதுவரை விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகலில் 21 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 2 அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.
வெளிநாட்டு மண்ணில் கடந்த 9 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் அரைசதத்தை தவிர்த்து ஒருமுறை கூட கில் 30 ரன்களை கடக்கவில்லை.
கில்லை விட அஸ்வினின் செயல்திறன் அதிகம்:
சுப்மன் கில் 35 இன்னிங்ஸ்கள் விளையாடி வெறும் 994 ரன்கள் எடுத்துள்ளார். இது முன்னாள் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் இர்பான் பதானின் டெஸ்ட் புள்ளிவிவரங்களை விட (986 ரன்கள்) சற்று அதிகம். சுவாரஸ்யமாக, டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது முதல் 35 இன்னிங்ஸுகளில் 1006 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 35 இன்னிங்ஸ்களுக்கு பிறகு இந்திய வீரர்கள் எடுத்த ரன்கள்
- ரவிச்சந்திரன் அஸ்வின்: 1035 ரன்கள்
- சுப்மன் கில்: 994 ரன்கள்
- இர்பான் பதான்: 986 ரன்கள்
டெஸ்ட் அணியில் கடும் போட்டி:
கடந்த காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு அணியின் இடம் பிடித்ததும், பெரிய அளவில் தோல்வியடைந்த வீரர்கள் பட்டியல் ஏராளம். அதில், முதல் வீரர் வாசிம் ஜாஃபர். மோசமான பார்ம் மற்றும் மோசமான சராசரி காரணமாக, கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளார். மேலும், மயங்க் அகர்வாலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
டெஸ்ட் அணியில் அதீத அனுபவம் கொண்ட அஜிங்க்யா ரஹானே மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்று மீண்டும் அணிக்கு திரும்ப முயற்சி செய்து வருகின்றனர். மேலும், சர்பராச் கான், ஹனுமான் விஹாரி, பிரியங்க் பஞ்சல் இந்திய அணியில் இடம் பிடிக்க முயற்சித்து வருகின்றன.
செஞ்சூரியனில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் கில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. இரண்டு இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த அவர், ஒட்டுமொத்தமாகவே 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். இறுதியில் தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரில் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.