பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா - கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பழனி தைப்பூசத் திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்நாளில் தமிழகம் மட்டுமில்லாது சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாட்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பழனி கோயிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபாடு நடத்துவது வழக்கம்.
வரும் ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா ஜனவரி மாதம் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், ஜனவரி 18ஆம் தேதி தைப்பூசத் திருழா நடைபெறுகிறது. தைப்பூசத் திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பழனி கோயில் இணை ஆணையர் நடராஜன், எஸ்.பி.சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
'கோவை மாவட்டம் முதல்வரின் இதயத்தில் இடம் பெற்றுள்ளது’ - அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
இதில் பழனி தைப்பூசத் திருவிழா கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அனுமதிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கோயில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்தனர்.
கொடைக்கானல் அருகே தீயில் கருகி சிறுமி மர்ம மரணம் - விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி அதிகாரிகள்
மேலும் பழனி சின்னகுமரர் விடுதியில் பக்தர்களுக்காக கட்டணமில்லா நவீன வசதிகளுடன் 48 குளியலறை, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும், நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காத வகையில் 8 டிக்கெட் கவுன்டர்கள் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் அமைக்கப்பட உள்ளது எனவும், மலைக் கோயிலில் வடக்குப் பிரகாரத்தில் சிறப்பு தரிசனம் மற்றும் கூடுதல் வரிசைகள் அமைப்பது, புனித நீராடும் இடும்பன்குளம் மற்றும் சண்முக நதியில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக தீயணைப்பு வீரர்களை பணியில் ஈடுபடுத்துவது ஆகியவை குறித்தும் முடிவு செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.