Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல், விலையை உயர்த்த உள்ளதாக பல முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Car Price Hike 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல், எந்தெந்த கார் உற்பத்தி நிறுவனங்கள் விலையை உயர்த்த உள்ளன என்ற விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
கார்களின் விலையை உயர்த்த முடிவு:
நடப்பாண்டு தொடக்கத்திலேயே பல முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள், தங்களது மாடல்களின் விலையை கணிசமாக உயர்த்தின. ஆனாலும் உள்நாட்டில் உற்பத்தி, விற்பனை மற்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி என்பது நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஏராளமான புதுப்புது கார் மாடல்களும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து சந்தைப்படுத்தப்பட்டன. 2026லும் பல கார் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. அதேநேரம், சந்தை சூழல், இயக்கவியல் செலவு மற்றும் உதிரி பாகங்களுக்கான செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1 முதல் விலையை உயர்த்துவதாக சில கார் உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு விலையை உயர்த்துகின்றன என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
1. JSW MG மோட்டார்ஸ்
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் உள்ள அனைத்து மாடல்களின் விலையும் 2 சதவிகிதம் உயர்த்தப்பட உள்ளது. இதன் காரணமாக நிறுவனம் தரப்பில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் மின்சார காரான விண்ட்சரின் விலை 30 ஆயிரம் முதல் 37 ஆயிரம் ரூபாய் வரை உயரலாம். அதன் விலை வரம்பு ரூ.14.27 லட்சம் தொடங்கி ரூ.18.76 லட்சம் வரை நீளக்கூடும். அதோடு ப்ராண்டின் மலிவு விலை காரான கோமெட்டின் விலை 10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை உயரக்கூடும்.
2. மெர்சிடஸ் பென்ஸ்
மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனமும் தனது போர்ட்ஃபோலியோவில் உள்ள அனைத்து கார் மாடல்களின் விலையையும், வரும் ஜனவரி 1ம் தேதி முதல் 2 சதவிகிதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நடப்பாண்டில் 6 சதவிகிதம் வரை குறைந்ததும் விலை ஏற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. இதையே இங்கிலாந்தின் பவுண்ட் மற்றும் யூரோவுடன் ஒப்பிட்டால், இந்திய ரூபாயின் மதிப்பு இரட்டை இலக்கத்தில் சரிவை சந்தித்துள்ளது. மெர்சிடஸ் பென்ஸின் வாகனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டெ விற்பனை செய்யப்படுவதால், இந்திய ரூபாயின் மதிப்பு விலையேற்றத்திற்கு காரணமாகியுள்ளது.
3. பிஎம்டபள்யு நிறுவனம்
மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு முன்பாகவே, வரும் ஜனவரி 1ம் தேதி முதல் இந்திய சந்தையில் தனது அனைத்து கார் மாடல்கள் மீதும் 2 சதவிகிதம் விலை உயர்வு அமலுக்கு வரும் என BMW நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என அந்நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளது.
4. ப்ரீமியம் கார்கள்
BYD நிறுவனமும் தனது சீலியன் 7 மின்சார கார் மாடலுக்கான விலையை, வரும் ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த வரிசையில் வால்வோ நிறுவனமும் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாம்.
லிஸ்டில் வரப்போகும் மற்ற நிறுவனங்கள்:
மேற்குறிப்பிடப்பட்ட ப்ரீமியர் கார் உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமின்றி, இந்தியாவில் வெகுஜன சந்தைக்கான கார்களை உற்பத்தி செய்து வரும் டாடா, ஹுண்டாய், ஹோண்டா, மற்றும் ஸ்கோடா ஆகிய நிறுவனங்கள் 2 முதல் 3 சதவிகிதம் வரை விலையை உயர்த்த பரிசீலித்து வருகிறதாம். அடுத்தடுத்த நாட்களில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. ஆண்டு தொடக்கத்திற்கான விலை உயர்வு திட்டத்தை மஹிந்த்ரா நிறுவனம் நிராகரித்து இருந்தாலும், அடுத்த நிதியாண்டு தொடக்கத்தில் விலை உயர்வை கொண்டுவர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.





















