தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
ஆங்கிலம் நன்கு எழுத, பேச தெரிந்த, 25 வயது நிரம்பிய, தகுதியும் திறமையும் வாய்ந்த கலை ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அயல் நாடுகளில் தற்காலிக கலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அயலகத் தமிழர் தினம் 2025 விழாவில், அயலகத் தமிழர் வாழும் பகுதிகளில் உள்ள தமிழ் சங்கங்களுடன் இணைந்து தமிழ் மொழியையும், தமிழ்க் கலைகளையும் நேரடியாக கற்றுத்தர ஆசிரியர்கள் நியமித்திட நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அரசாணையினை செயல்படுத்தும் வகையில், தமிழ் இணையக் கல்விக் கழகம் வாயிலாக தமிழ் ஆசிரியர்களையும், கலை பண்பாட்டுத் துறையின் வாயிலாக கலை ஆசிரியர்களையும் தேர்வு செய்து அளித்திட அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
எந்தெந்த நாடுகளுக்கு ஆசிரியர்கள் தேவை?
மியான்மர், இந்தோனேசியா, கம்போடியா, மாலத்தீவு, மொரிஷீயஸ், ரீயூனியன், சீஷெல்ஸ், பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மலாவி, உகாண்டா போன்ற நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்கள் கிராமிய நடன ஆசிரியர்கள் மற்றும் பரத நாட்டிய ஆசிரியர்களை அனுப்பிட கோரியுள்ளனர்.
என்ன தகுதி?
மேற்காண் கலைப் பிரிவுகளை சேர்ந்த ஆங்கிலம் நன்கு எழுத, பேச தெரிந்த, 25 வயது நிரம்பிய, தகுதியும் திறமையும் வாய்ந்த கலை ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை கலை பண்பாட்டுத்துறையின் தளத்திலிருந்து https://artandculture.tn.gov.in பெற்றுக் கொள்ளலாம்.
https://artandculture.tn.gov.in/sites/default/files/Art%20Teachers%20%20Application%20Form%20-%20Foriegn%20countires_0.pdf என்ற இணைப்பில் இருந்து, இந்த விண்ணப்பத்தை நேரடியாக வாங்க முடியும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து, பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகம், இராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600 028 என்ற முகவரிக்கு 31.12.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.
ரூ.1.25 லட்சம் ஊதியம்
தேர்வு செய்யப்படும் கலை ஆசிரியர்கள் ஓர் ஆண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். மாதம் ஒன்றுக்கு ரூ.1,25,000/- ஊதியமாக வழங்கப்படும். பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்டிற்கு ஒரு முறை சென்று திரும்புவதற்கான போக்குவரத்து செலவினம், விசா செலவினம், தங்குமிட செலவினங்களை நிபந்தனைகளுக்கு உட்பட்டு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை வழங்கும்.
பரத நாட்டியம் மற்றும் கிராமிய நடனங்களில் பல்கலைக்கழக பாடத்திட்டத்தின் படி சிறந்த முறையில் வகுப்புகள் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்த கலைஞர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் வளர்மதி அழைப்பு விடுத்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: https://artandculture.tn.gov.in/






















